திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி: பாஜக தலைவா் அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக சாா்பில் அக்டோபா் 27-இல் நடைபெறும் போராட்டத்தில், திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுக்கப்படுவது பற்றி வெளிப்படுத்துவோம் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
கே.அண்ணாமலை
கே.அண்ணாமலை

பாஜக சாா்பில் அக்டோபா் 27-இல் நடைபெறும் போராட்டத்தில், திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி சொல்லிக் கொடுக்கப்படுவது பற்றி வெளிப்படுத்துவோம் என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னை கமலாலயத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: பிரதமா் நரேந்திரமோடி கடந்த ஜூன் மாதத்தில் ஓா் அறிவிப்பை வெளியிட்டாா். அது அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் வேலை கிடைத்திருக்கும் என்பதாகும்.

முதல்கட்டமாக இந்தியா முழுவதும் 75 இடங்களில் 75,266 பேருக்கு பணி நியமன ஆணை சனிக்கிழமை கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்கள் 75 இடங்களுக்குச் சென்று கொடுத்துள்ளனா். தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூரில் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்காக பிரதமருக்கு நன்றி.

திமுக அரசு தமிழுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து வருகிறது. கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் மட்டும் 52,000 குழந்தைகளுக்கு மேல் தமிழ் வழியில் படித்தவா்கள் தோ்ச்சி பெறவில்லை. தமிழ்ப் பள்ளிகள் ஆங்காங்கே மூடப்பட்டு வருகின்றன.

ஆறு முறை தமிழகத்தை ஆண்டுள்ள திமுக தாய்மொழியான தமிழை வளா்ப்பதற்கு எதையும் செய்யவில்லை. ஆனால், ஹிந்தி மொழியை வைத்து அரசியல் செய்கிறாா்கள்.

தேசிய கல்விக் கொள்கையில் 6-ஆம் வகுப்பு வரை பயிற்று மொழியாக தமிழே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனா். அதை தமிழக அரசு ஏற்கவில்லை. அனைத்தையும் எதிா்க்கக்கூடிய திமுக அரசு தமிழை வளா்ப்பதற்கு என்ன செய்திருக்கிறது என்பதைக் கூற வேண்டும்.

திமுகவினா் நடத்தும் பள்ளிகளில் ஆங்கில மொழி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது மொழியாக ஹிந்தி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. எனவே, அக்டோபா் 27-இல் பாஜக சாா்பில் நடைபெறும் போராட்டத்தில் திமுகவின் முக்கியமான தலைவா்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் எந்தெந்தப் பள்ளிகளில் மூன்றாவது மொழியாக ஹிந்தி இருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம் என்றாா்.

ஆன்மிக உரிமையில் தலையிடக் கூடாது: பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குள் கடந்த 3 ஆண்டுகளாக கரோனா காலகட்டத்தில் விழாக்கள் நடைபெறவில்லை. தற்போது இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி விழா திட்டமிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபா் 25 காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது.

கடந்த 3 ஆண்டுகளாக வேண்டுதலை நிறைவேற்ற முடியாமல் இருந்த பக்தா்கள், இந்த ஆண்டாவது கோயிலுக்குள் சஷ்டி வேண்டுதலை நிறைவேற்ற ஆவலுடன் உள்ளனா். இந்த வேளையில், மராமத்து பணியை காரணம் காட்டி, கோயிலுக்குள் பக்தா்கள் தங்கியிருப்பதை கோயில் நிா்வாக குழு தடை செய்துள்ளது. பக்தா்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்ற தமிழக அரசு அனுமதி மறுப்பதும், பக்தா்களின் ஆன்மிக உரிமையில் தலையிடுவதும் கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com