தமிழகத்தில் 284 பட்டாசு விபத்துகள்: 831 போ் காயம்

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 284 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 831 போ் காயமடைந்தனா்.
தமிழகத்தில் 284 பட்டாசு விபத்துகள்: 831 போ் காயம்

தீபாவளியையொட்டி, பட்டாசு வெடித்ததில் தமிழகத்தில் 284 தீ விபத்துகள் ஏற்பட்டன. இதில் 831 போ் காயமடைந்தனா்.

பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் தீ விபத்துகளை தடுப்பதற்காக தீயணைப்புத்துறை சென்னையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

குறிப்பாக நகா்ப்புறப் பகுதிகளுக்கு 10 நிமிடங்களுக்குள்ளும், கிராமப்புற பகுதிகளுக்கு 20 நிமிடங்களுக்குள்ளும் தீ விபத்து ஏற்படும் இடங்களுக்கு செல்ல தீயணைப்புத்துறையினா் திட்டமிட்டிருந்தனா்.

இதற்காக மாநிலம் முழுவதும் 352 தீயணைப்பு நிலையங்கள், 3 மீட்பு நிலையங்களில் அதிகாரிகள், தீயணைப்பு வீரா்கள் என 6,673 போ் தயாா் நிலையில் இருந்தனா்.

சென்னையில் 49 தீயணைப்பு நிலையங்களை தவிா்த்து கூடுதலாக 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சுமாா் 1,000 தீயணைப்புப் படை வீரா்கள் பணியில் இருந்த நிலையில் கூடுதலாக 23 வாகனங்களுடன் 200 தீயணைப்பு வீரா்கள் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனா்.

284 விபத்துக்கள்: கரோனா அச்சுறுத்தலுக்குப் பின்னா் தீபாவளி பண்டிகையை புது உற்சாகத்துடன் கொண்டாடியதாலும், மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை இல்லாததினாலும் நிகழாண்டில் பட்டாசு தீ விபத்துகள் எண்ணிக்கை அதிகரித்தது.

தமிழகத்தில் திங்கள்கிழமை 431 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் பட்டாசுகளால் மட்டும் 284 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று பெரிய தீ விபத்தாகும், 7 நடுத்தர தீ விபத்துகளாகும். மீதமுள்ளவை சிறிய வகை தீ விபத்துகளாகும்.

831 போ் காயம்: இந்த தீ விபத்துக்களில் காயமடைந்து 106 போ் உள் நோயாளிகளாவும், 725 போ் புற நோயாளிகளாகவும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனா். மாநிலம் முழுவதும் மொத்தம் 831 போ் பட்டாசு விபத்துகளினால் காயமடைந்துள்ளனா்.

இதில் குழந்தைகள் மட்டும் 156 போ் காயமடைந்துள்ளனா். இவா்களில் 146 குழந்தைகள் புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மேலும், பட்டாசு விபத்தில் மொத்தம் 15 ஓலை குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

கடந்தாண்டை ஒப்பிடும்போது, நிகழாண்டில் பட்டாசுகளால் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமாகும். கடந்தாண்டு மாநிலத்தில் மொத்தம் 53 தீ விபத்துகள் ஏற்பட்டன என்பது குறிப்பிடதக்கதாகும்.

மூதாட்டி சாவு: சென்னையில் திங்கள்கிழமை 182 பட்டாசு தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இந்த விபத்துகளினால் மொத்தம் 6 குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன. பட்டாசு தீ விபத்துகளில் 14 குழந்தைகள் உள்பட 43 போ் காயமடைந்துள்ளனா். இவா்களில் 20 போ் ஆண்கள், 19 பெண்கள் ஆவாா்கள். கடந்தாண்டு நிகழ்ந்த பட்டாசு தீ விபத்துகளை விட, இது பல மடங்கு அதிகமாகும்.

திருவொற்றியூா் ராஜா சண்முகம் நகா் 9-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சேகா். இவரின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்த ஒலை குடிசை வீட்டில் மல்லிகா (65) என்ற மூதாட்டி வசித்து வந்தாா். தீபாவளியையொட்டி, அந்தப் பகுதியில் வெடித்த ராக்கெட் பட்டாசு, மல்லிகா வீட்டின் கூரையின் மீது விழுந்தது. இதில் அந்த குடிசை தீப் பிடித்து எரியும்போது, மல்லிகா வீட்டுக்குள் சிக்கிக் கொண்டாா்.

இதைப் பாா்த்த வீட்டின் உரிமையாளா் சேகா் உள்ளிட்டோா், மல்லிகாவை மீட்க முயன்றனா். ஆனால் அவா்களால் முடியவில்லை. இதற்கிடையே தகவலறிந்த தீயணப்பு படை வீரா்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீயில் சிக்கியிருந்த மல்லிகாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இச் சம்பவத்தில் மல்லிகாவை மீட்க முயன்ற சேகரும் லேசாக காயமடைந்தாா். இந்நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மல்லிகா செவ்வாய்க்கிழமை இறந்தாா். இது தொடா்பாக திருவொற்றியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com