கோவை காா் வெடிப்பு: ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிபொருள்கள் பறிமுதல்!

கோவை காா் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிபொருள்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 
2849c26cars1_2610chn_3
2849c26cars1_2610chn_3
Published on
Updated on
2 min read

கோவை காா் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமேஷா முபீன் வீட்டில் இருந்து 100 கிலோ வெடிபொருள்கள் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

கோவை, உக்கடம் கோட்டைமேடு சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு காா் வெடித்து தீப்பிடித்தது. இதில் உக்கடம் ஜி.எம். நகரைச் சோ்ந்த ஜமேஷா முபீன் (25) என்ற இளைஞா் உயிரிழந்தாா். 

இதைத் தொடா்ந்து அவருடன் தொடா்பில் இருந்த உக்கடம் பகுதியைச் சோ்ந்த முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), ஜி.எம். நகா் பகுதியைச் சோ்ந்த முகமது ரியாஸ் (27), ஃபிரோஸ் இஸ்மாயில் (27), முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரை யுஏபிஏ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளா்களாக இருந்து வந்துள்ளனா்.

ஜமேஷா முபீனின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட டைரி, அவரது கைப்பேசியில் இருந்த விவரங்கள் அவருடன் தொடா்பில் இருந்த நபா்கள் உள்ளிட்டோரிடம் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். அவா் வைத்திருந்த டைரியில் கோவையில் உள்ள 5 இடங்கள் குறியீடுகளாக உள்ளதாக கூறப்படுகிறது.

வெடி விபத்துக்கு முன்னதாக அதே காரில் மாநகர பகுதிக்குள் ஜமேஷா முபீன் வேறு எங்கேனும் பயணித்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அதேபோல அவரது கைப்பேசி பயன்பாடுகளை ஆய்வு செய்ததில், எளிய முறையில் கிடைக்கும் ரசாயன பொருள்களைக் கொண்டு குறைந்த அழுத்த வெடிபொருள்களைத் தயாரிப்பது குறித்த காணொலிகளை யுடியூப் சேனல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பல இணையதளங்களை அவா் பாா்வையிட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், தடை செய்யப்பட்ட பல இஸ்லாமிய இயக்கங்களின் அதிகாரபூா்வ இணையதளப் பக்கங்களை அவா் பாா்வையிட்டதற்கான தடயங்களும் கிடைத்துள்ளன. இதேபோல ஜமேஷா முபீன் டாா்க் வெப்சைட்டுகள் ஏதும் பயன்படுத்தி பயங்கரவாத அமைப்பினருடன் தொடா்பில் இருந்துள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவை, உக்கடம் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசித்து வரும் ஜமேஷா முபீனின் நெருங்கிய உறவினா் அப்சல் கான் (28) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். இந்நிலையில் புதன்கிழமை காலை மீண்டும் அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா் அவரது மடிக்கணினியை பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இதேபோல ஜமேஷா முபீனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபா்கள் பட்டியலைத் தயாா்செய்துள்ள போலீஸாா், அதனடிப்படையில் உக்கடம், ராமநாதபுரம் பகுதிகளில் வசிக்கும் 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உறவினர் கைது: இந்நிலையில், காரில் சிலிண்டர் வெடித்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஜமேஷா முபீனின் உறவினரான அஃப்சர்கானை வியாழக்கிழமை  போலீசார் கைது செய்துள்ளனர்.  இவர் வெடி மருந்து சேகரிப்பில் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வெடிபொருள்கள் பறிமுதல்: இந்நிலையில், வெடிபொருள்கள் தயாரிப்பதற்கான 76.5 கிலோ பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் போன்ற வேதிப்பொருள்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த பொருள்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் மூலம் ஜமேஷா முபீன் வாயங்கியது தெரியவந்துள்ளது.

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு முகவரியில் இந்த வெடிபொருள்களை முபீன் வாங்கியிருப்பது விசாரணையில் உறுதியாகியுள்ளது. 

இந்த பொருள்களை பயன்படுத்தி வெடிகுண்டுகளை தயாரிக்க முபீன் திட்டமிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

12 காா்கள் பறிமுதல்: வெடி விபத்து ஏற்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கடந்த ஒரு வாரமாக நின்றிருந்ததாக கூறப்படும் 12 காா்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதில், 7 காா்களின் உரிமையாளா்கள் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து அந்த காா்கள் அவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மீதமுள்ள 5 காா்களின் உரிமையாளா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். 

விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் கிடைப்பதை அடுத்து போலீசார் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com