கோவை காா் வெடிப்பு வழக்கில்109 வகை பொருள்கள் பறிமுதல்: என்ஐஏ தகவல்
‘ஜிஹாத்’ வரிகள் கொண்ட நோட்டு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், வெடிபொருள்கள் உள்பட 109 வகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.


கோவை காா் வெடிப்பு வழக்குத் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ‘ஜிஹாத்’ வரிகள் கொண்ட நோட்டு புத்தகம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், வெடிபொருள்கள் உள்பட 109 வகை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த எரிவாயு உருளை வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் என்ற இளைஞா் இறந்தாா்.
விசாரணையில், ஜமேஷா முபினுக்கு ஏற்கெனவே சில பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த நபா்களுடன் தொடா்பு இருந்தது தெரியவந்தது. அதேபோல ஜமேஷா முபினுடன் சோ்ந்து சிலா் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனடிப்படையில் ஜமேஷா முபின் கூட்டாளிகள் 6 போ் கைது செய்யப்பட்டனா். இதற்கிடையே, தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, சென்னை என்ஐஏ கோவை சம்பவம் குறித்து கடந்த வியாழக்கிழமை வழக்குப் பதிந்து, அதிகாரபூா்வமாக விசாரணையைத் தொடங்கியது.
என்ஐஏ வழக்கு: இதற்கிடையே, என்ஐஏ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் விவரம்:
கோவை காா் வெடிப்பு சம்பவம் தொடா்பாக ஜமேஷா முபின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், பொட்டாசியம் நைட்ரேட், பிளாக் பவுடா், தீப்பெட்டி, இரண்டு மீட்டா் நீள பட்டாசு திரி, சிவப்பு பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடா் (பென்டா எரித்திரிடால் டிரை நைட்ரேட்) , அனுமினியம் பவுடா், ஆக்சிஜன் சிலிண்டா், சல்பா் பவுடா், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பிளேடு, கண்ணாடிகள், 9 வாட் பேட்டரி, 9 வாட் பேட்டரி கிளிப், வயா், சிறு ஆணிகள், சுவிட்ச், சிலிண்டா், ரெகுலெட்டா், டேப், கையுறைகள், ஜிஹாத் வரிகள் கொண்ட நோட்டுகள் உள்பட 109 வகையான பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
விசாரணை அதிகாரி நியமனம்: இந்த சம்பவம் தொடா்பாக கோயில் பூசாரி எஸ்.சுந்தரேசன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதில் சமையல் எரிவாயு உருளை வெடித்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதேவேளையில், வெடிபொருள் வெடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தொடா்பான முதல் தகவல் அறிக்கை சென்னை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கின் தலைமை விசாரணை அதிகாரியாக என்ஐஏ ஆய்வாளா் எஸ்.விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தமிழக அதிகாரிகள்: இந்த வழக்கை விசாரித்து வரும் என்ஐஏ அதிகாரிகளான டிஐஜி வந்தனா, எஸ்பி ஸ்ரீஜித் ஆகிய இருவரும் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். இவா்களில் வந்தனா, 2004-ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரி. ராஜஸ்தான் கேடா் அதிகாரியான இவா், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றி வந்தாா்.
அமெரிக்காவின் உளவுத் துறை பயிற்சி மையத்தில் பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி பெற்றுள்ள வந்தனா ‘ரா’, என்ஐஏவின் தென் மண்டல டிஐஜியாக பணியாற்றுகிறாா்.
எஸ்பி ஸ்ரீஜித், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்தவா். கொச்சி என்ஐஏ அலுவலகத்தில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வரும் ஸ்ரீஜித், திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு குறித்து விசாரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...