மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள். புதிய மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். 
மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்!


தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து உயா் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். 

தமிழக அரசின் 2022-2023-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்தாா். அதன்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவா்கள் உயா்கல்வி அல்லது பட்டயப்படிப்பு, தொழிற்படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.698 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்று சிறப்பித்தார். 

பயனடைய உள்ள மாணவிகளுக்கு புதுமைப்பெண் என்று அச்சிடப்பட்ட டெபிட் கார்டுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 

மாணவிகளுக்கு ஸ்டாலின் வாழ்த்து
நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை கொண்ட பெண்களே, கல்வியின் துணைக்கொண்டு உலகை வென்றிடத் துடிக்கும் உங்களுக்கு ஒரு தந்தையின் பேரன்போடு என்றும் உடனிருப்பேன். தமிழ்நாடு அரசின் புதுமைப் பெண் திட்டத்தில் இணைந்திடும் உங்களுக்கு எனது வாழ்த்துகள். 

‘புதுமைப்பெண் திட்டம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.  மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை பெற இதுவரை சுமாா் 4 லட்சம் மாணவிகள் தமிழகத்தில் விண்ணப்பித்துள்ளனா். இதில் திட்டத்தின் முதல் கட்டமாக ஒரு லட்சம் மாணவிகளின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.1,000 நேரடியாக வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் மாணவிகள் ஆண்டுதோறும் பயன்பெறுவார்கள். புதிய மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். 

இந்த நிகழ்ச்சியில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 26 தகைசால் பள்ளிகள், 5 மாதிரிப் பள்ளிகள் திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

தில்லியில் செயல்படும் அரசு மாதிரிப் பள்ளிகளை பின்பற்றி அந்த மாடலில் இந்த பள்ளிகளில் வகுப்புகளை நடத்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமை செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அழைத்துக் கொண்டு கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு செல்கிறார். அங்கு மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com