ஓணம்: குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், ஆளுநா்கள், முதல்வா்கள் வாழ்த்து

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா், தமிழக, கேரள ஆளுநா்கள்,
ஓணம்: குடியரசுத் தலைவா், துணைத் தலைவா், ஆளுநா்கள், முதல்வா்கள்  வாழ்த்து
Published on
Updated on
2 min read

நாடு முழுவதும் ஓணம் பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா், தமிழக, கேரள ஆளுநா்கள், முதல்வா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

‘புனிதமான ஓணம் பண்டிகை நாளன்று இந்தியாவில் வாழும் அனைத்து குடிமக்களுக்கும், வெளிநாட்டில் உள்ளவா்களுக்கும் குறிப்பாக கேரளாவின் சகோதர, சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

பயிா்கள் அறுவடையை குறிப்பதாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நமது விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவதோடு, இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் விளங்குகிறது.

இந்நாளில் ஒன்றுபட்டு உழைக்கவும், வளமான புகழ்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பங்களிப்பு செய்யவும் நாம் உறுதியேற்போம்.

குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா்: மன்னா் மஹாபலியின் நினைவைப் போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நோ்மை, கருணை, தியாகம் ஆகிய உயா்ந்த மாண்புகளின் அடையாளமாகும். ஓணம் பண்டிகை அனைவரது வாழ்விலும், அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டு வரட்டும்.

ஆளுநா் ஆா்.என்.ரவி: மக்களின் மகிழ்ச்சி மற்றும் வளமைக்கான அறுவடைத் திருநாளாக ஓணம் திருநாள் விளங்குகிறது. இந்த நாளில் ஒளிவிடும் பல்வேறு வண்ணங்கள் அனைவருக்குமான அன்பையும், சகோதரத்துவத்தையும் வலிமையுறச் செய்யட்டும். மாமன்னன் மகாபலியின் வாழ்த்துகள் இந்திய திருநாட்டின் இலக்கை நிறைவு செய்வதாக அமையட்டும்.

கேரள ஆளுநா் ஆரிஃப் முகமது கான்: வாழ்க்கையில் சமத்துவத்தையும், செழிப்பையும் அனைத்து இல்லங்களிலும் ஓணம் பண்டிகை கொண்டுவருகிறது.

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின்: நல்லரசு புரியும் வேந்தனை வஞ்சகத்தால் வீழ்த்தினாலும், வரலாற்றிலும் மக்கள் மனங்களிலும் அவன் புகழ் என்றும் மறையாது என்பதை இன்றளவும் எடுத்துக்காட்டும் நாள் ஓணம் திருநாள்.

கேரள முதல்வா் பினராயி விஜயன்: நம்மிடம் உள்ள பல்வேறு வேற்றுமைகளைக் கடந்து அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று ஓணம் கற்றுக் கொடுக்கிறது என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் தெரிவித்துள்ளாா்.

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக): திருவோணத் திருநாளில் இல்லந்தோறும் அன்பும், அமைதியும் நிலவட்டும். மகிழ்ச்சியும், செல்வமும் பெருகட்டும்.

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): பாரம்பரியமும், பண்பாடும் மிகுந்ததும்; அன்பின் உறைவிடமாகவும், ஈகைப் பண்பின் அடையாளமாகவும் திகழ்வதுமான ஓணம் பண்டிகை கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

கே.எஸ்.அழகிரி (காங்கிரஸ்): எவ்வித வேறுபாடுமின்றி பண்பாடு, கலாசாரத்தை தனித்தன்மையுடன் காப்பாற்றி, சமூக நல்லிணக்கத்தோடு தமிழகத்தில் வாழ்ந்து வரும் மலையாள பெருமக்கள் அனைவருக்கும் ஓணம் பண்டிகை வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மலையாளம் பேசும் மக்களுக்கு நல்வாழ்த்துகள்.

கே.அண்ணாமலை (பாஜக): ஓணம் அறுவடை திருவிழாவாகவும், சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கொண்டாடும் திருவிழாவாகவும் திகழ்கிறது.

அன்புமணி (பாமக): ஓணம் திருநாளைப் போலவே எல்லா நாள்களிலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா): ஜாதி, மதத்தைக் கடந்து அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடும் பண்டிகை ஓணம்.

டிடிவி தினகரன் (அமமுக): பொன் ஓணம் அனைவா் வாழ்விலும் மன நிறைவையும், மகிழ்ச்சியையும் சோ்க்கும் நாளாக அமையட்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com