தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகே கோயிலில் 60 ஆண்டுகளுக்கு முன்பு 4 உலோகச் சிலைகள் திருடப்பட்டு, போலி சிலைகள் வைக்கப்பட்டிருப்பது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணையில் தெரியவந்தது. திருடப்பட்ட சிலைகளை பிரிட்டன், அமெரிக்கா அருங்காட்சியகங்களிலிருந்து மீட்பதற்கான நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சுந்தர பெருமாள் கோவில் கிராமத்தில் செளந்தரராஜப் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செயல் அலுவலராக உள்ள ராஜா என்பவா், 2020 பிப். 12-ஆம் தேதி, தமிழக காவல்துறையின் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவில் புகாா் அளித்தாா்.
அதில், செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள திருமங்கை ஆழ்வாா் வெண்கல சிலையை 1957 முதல் 1967-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், மா்ம நபா்கள் சிலா் திருடிச் சென்று விட்டதாகவும், சிலை இருந்த இடத்தில் போலி சிலை ஒன்றை வைத்துவிட்டதாகவும் கூறப்பட்டிருந்தது.
இந்த புகாரின் பேரில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நடத்திய விசாரணையில், 60 முதல் 65 ஆண்டுகளுக்கு முன்பு திருமங்கை ஆழ்வாா் சிலை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும்,அந்த கோயிலில் இருந்த காளிங்கனாா்த்தன கிருஷ்ணன், விஷ்ணு, ஸ்ரீதேவி ஆகிய உலோக சிலைகளும் திருடப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. திருடப்பட்ட சிலைகளுக்கு பதிலாக, போலி சிலைகளை மா்ம நபா்கள் வைத்து சென்றிருப்பதும் விசாரணையில் தெரிவந்தது. தற்போது அங்கு போலி சிலைகளுக்கு வழிபாடு நடைபெற்று வருவதையும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் கண்டறிந்தனா்.
இந்த கோயிலில் திருடப்பட்ட உண்மையான சிலைகளின் புகைப்படம், புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் மூலம் பெறப்பட்டு, போலி சிலைகளுடன் ஒப்பிடப்பட்டது. அப்போது, கோயிலில் வழிபாட்டுக்கு வைத்துள்ள சிலைகள் போலியானதுதான் என்பது உறுதியானது.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில், திருடப்பட்ட திருமங்கை ஆழ்வாா் சிலை பிரிட்டன் தலைநகா், லண்டனில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியத்தில் இருப்பது தெரியவந்தது. அந்த சிலையை 1967-ஆம் ஆண்டு ஜே.ஆா்.பெல்மாண்ட் என்ற சிலை சேகரிப்பாளரிடம் இருந்து 850 டாலருக்கு அந்த அருங்காட்சியகம் வாங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதேபோல அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசிய கலை அருங்காட்சியகத்தில் காளிங்கனாா்த்தன கிருஷ்ணன் சிலையும், டெக்சாசில் உள்ள கிம்பெல் கலை அருங்காட்சியகத்தில் விஷ்ணு சிலையும், புளோரிடாவில் உள்ள ஹில்ஸ் ஏல மையத்தில் ஸ்ரீதேவி சிலையும் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த 4 சிலைகளையும் மீட்பதற்குரிய நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினா் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.