
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஹெச்.சி.எல். நிறுவனம் சார்பில் சுமார் 300 கோடி செலவில் பக்தர்களுக்கான மெகா திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இத்திட்டம் தொடங்கி முடிவடையும் காலத்தில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகளைப் பூர்த்தி செய்வதற்கும், கந்த சஷ்டி விழாவில் திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்திடவும் அறநிலையத்துறை திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக திருக்கோயில் பணியாளர்களின் கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
திருக்கோயில் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்திற்கு, அறங்காவலர் குழுத்தலைவர் இரா.அருள்முருகன் தலைமை வகித்தார். இணை ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ம.அன்புமணி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற திருக்கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் சுகாதார வசதியை மேம்படுத்த வேண்டும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வதை குறைப்பதற்காக வரிசைப்பாதையில் மாற்றம் செய்திட வேண்டும், கடற்கரையில் அவசரக் கால பயன்பாட்டுக்காக ஸ்டெச்சர் தேவை எனவும் வலியுறுத்தினர்.
இது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறங்காவலர்குழுத்தலைவர் இரா.அருள்முருகன் பணியாளர்களிடம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.