முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை


சென்னை: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.

விராலிமலை அருகே இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அதே நேரத்தில் மதுரையில் சி. விஜயபாஸ்கரின் நண்பர் பாலாஜியின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்ட விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், ஐசரி கணேஷ், வேல்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்று 13 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

250 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை இயங்கி வருவதாக தவறான தகவல் அளிக்கப்பட்டநிலையில், வேல்ஸ் அறிவியல் மைய நிர்வாகத்துக்கு விஜயபாஸ்கர் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அருகே ஊத்துக்கோட்டை, மஞ்சாங்கரையில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்க, விஜயபாஸ்கர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த போது, தேசிய மருத்துவக் குழுமத்தின் விதிகளுக்கு முரணாக 2020ல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் அறிவியல் மையம் முழுமையாக 250 படுக்கைகளுடன் முழுமையான மருத்துவமனையாக இயங்குவதாக தவறான தகவல்அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனைக்குத்தான் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்ற விதிமுறையும், குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மருத்துவமனை செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் மீறப்பட்டுள்ளதும், முறைகேடு நடந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com