
பருவ கால நோய்கள் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சென்னையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மட்டும் ஒரே நாளில் 100 குழந்தைகள் காய்ச்சல், சளி, இருமல், டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த இரு மாதங்களுக்கு இத்தகைய நிலையே நீடிக்கும் என்றும், நவம்பருக்குப் பிறகு பருவ கால நோய்கள் குறையும் என்றும் மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்த் தொற்றுகள் தற்போது பரவி வருகின்றன. ஏறத்தாழ கரோனா பாதிப்புக்கான அறிகுறிகளுடன் அவை உள்ளன.
அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி, மயக்கம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் தற்போது குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகின்றன. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, சென்னையில் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் கூடுதலாக படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, திருவள்ளூா், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பருவக்கால நோய்களால் பாதிக்கப்பட்டு ஏராளமானோா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து எழும்பூா் அரசு குழந்தைகள் மருத்துவமனை இயக்குநா் டாக்டா் எழிலரசி கூறியதாவது:
பொதுவாகவே,“ஆண்டுதோறும் பருவ கால நோய்கள் வருவது வழக்கமான ஒன்று. அதுவும், செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இன்ஃப்ளூயன்ஸா, டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் இந்த காலத்தில்தான் தீவிரமாக பரவ வாய்ப்புள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. அடுத்து வரும் மாதங்களில் இந்த பாதிப்பு குறைந்துவிடும்.
கடந்த இரு ஆண்டுகளாக பள்ளிகள் சரிவர இயங்காததால் குழந்தைகளுக்கு பருவ காலத் தொற்று அதிகமாக ஏற்படவில்லை. தற்போது அந்த நிலை மாறியுள்ளது.
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து எடுத்துக் கொள்ளக் கூடாது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் தாமதிக்காமல் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளிப்பாா்கள். காய்ச்சல், சளி போன்றவைகளை கரோனா தொற்றின் அறிகுறிகளாக மட்டும் கருதக்கூடாது. உரிய பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க வேண்டுமென்று மருத்துவா்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.