அக்.2026-ல் மதுரை எய்ம்ஸ்! மத்திய இணையமைச்சர் எல். முருகன் தகவல்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் அக்டோபர் 2026 ஆம் ஆண்டுதான் நிறைவடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சி: திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய சனிக்கிழமை வருகை தந்த அவர், முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில்கூறியதாவது: 

கடந்த இரண்டு நாள்களாக தமிழகத்தில் கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாஜக, இந்து முண்ணனியினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இது  கண்டனத்துக்கு உரியது. இதுபோன்று தாக்குதலில் ஈடுபடுவோர் மீது, காவல்துறை மூலம் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான தண்டனை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்ஐஏக்கு கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் தான் சோதனை நடத்தப்பட்டது . அதில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை திமுக திரித்து கூறுவதோடு ஓட்டு வங்கி அரசியல் செய்கிறது. இந்த சோதனை குறித்து பேசக்கூடிய அரசியல்வாதிகள் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்  ரூ.1664 கோடி நிதியில் கட்ட திட்டமிடப்பட்டு, பணிகள் கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதற்கான நிதி இந்த மாதம் 22 ஆம் தேதிதான் மத்திய அரசால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதன் பணிகள் 2026 அக்டோபர் மாதம் நிறைவடையும் என்றார்.

ஆ.ராசாவின் கருத்திற்கு பாஜகவின் பட்டியிலின‌ அணி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேறு யாராக இருந்தாலும் பதில் சொல்லலாம். இது திமுகவின் வெற்று விளம்பரத்திற்கான பேச்சாக உள்ளது‌. வேல் யாத்திரையை பாஜக நடத்திய போது, திமுக சார்பிலும் வேலை கையில் பிடித்து ஒரு அரசியலை நிகழ்த்தினார் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ராகுல் காந்தியின் நடை பயணம் ஆரம்பத்திலேயே தோல்வியை சந்தித்து உள்ளது. அவர் கேரளாவிற்குள் நுழைந்து நடை பயணத்தில் இருக்கும் போதே கோவாவில் காங்கிரஸ் கட்சியினர் பலர் கட்சியை விட்டு வெளியேறினர். அவர் காஷ்மீர் சென்று அடைவதற்குள் ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சியும் இந்தியாவிற்குள் இல்லாமல் போய்விடும்.
திருச்சி வானொலி நிலையம் இட மாற்றம் செய்வதாகவும், வானொலி நிலையம் மூடப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது அது உண்மையல்ல‌.

ஆ.ராசாவிற்கு கண்டனம் தெரிவித்து பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வன் கொடுமை தடுப்புச் சட்டம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது.
சர்ச்சை ஏற்படுத்திய பேச்சை பேசியவரை விடுத்து, அதை எதிர்த்து கேள்வி கேட்டவர் மீது வழக்குப் பதிவு செய்வது‌ கண்டனத்திற்குரியது என்றார்.

நயினார் நாகேந்திரன், தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர் குறித்து புகழ்ந்து பேசியுள்ளாரே, இதனால் அவர் திமுகவில் இணையப் போவதாக கூறப்படுகிறதே என கேட்டதற்க்கு, அதுவும்  ஊகம் தான் என்றார். 

இந்நிகழ்வின்போது திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகரன், பார்த்திபன் சுப்பிரமணியன் பாலன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com