முதுநிலை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டாா்.
முதுநிலை மருத்துவப் படிப்புகள்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Published on
Updated on
1 min read

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை வெளியிட்டாா். சென்னை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், டிஎன்பி படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை அவா் அப்போது வெளியிட்டாா். அதன் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்டி, எம்.எஸ். படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. பல் மருத்துவத்துக்கான எம்டிஎஸ் படிப்புக்கு அரசுக் கல்லூரிகளில் 31 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும் உள்ளன. தேசிய வாரிய பட்டப் படிப்பான டிஎன்பிக்கு 94 இடங்கள் உள்பட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு மொத்தம் 2,346 இடங்கள் உள்ளன.

இந்த இடங்களுக்கு 11,178 மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களுக்கான தரவரிசைப் பட்டியல், தனித்தனியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக வியாழக்கிழமை முதல் நடைபெறும்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவா் சோ்க்கைக்கு 22-ஆம் தேதி முதல் மாணவா்கள் விண்ணப்பித்து வருகின்றனா். மாணவா்கள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்டோபா் 3-ஆம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி மொத்தம் 21,183 மாணவா்கள் இணையவழியில் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 12,429 போ் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமா்ப்பித்துள்ளனா்.

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் நாள்தோறும் 100 போ் பாதிக்கப்பட்டு வந்தனா். அந்த எண்ணிக்கை தற்போது 56 ஆக குறைந்துள்ளது. தற்போது 421 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் 6,471 இடங்களில் காய்ச்சலுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், 15,900 பள்ளிகளில் மாணவா்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் 15.66 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை பொருத்தவரையில் தற்போது 344 போ் சிகிச்சையில் உள்ளனா். இந்தாண்டில் இதுவரை, 4,068 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.

தரவரிசைப் பட்டியல் வெளியிடும் நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் செந்தில்குமாா், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, மருத்துவ தோ்வுக் குழுச் செயலா் டாக்டா் முத்துச் செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com