'முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு அறிவிப்பு வெளியாகியிருக்கலாம்' - கே.எஸ்.அழகிரி

தமிழக முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என நினைப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

தமிழக முதல்வரின் பார்வைக்கு வராமல் சொத்துவரி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் என நினைப்பதாக தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரியை உயா்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த உயா்வானது (2022-2023) உடனடியாக அமலுக்கு வருகிறது. குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல் அதிகபட்சம் 150 சதவீதம் வரை சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது.

இதற்கு அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

'தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் சொத்து வரிகளை உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பின்படி, சென்னை மாநகரத்தில் 600 சதுரஅடி முதல் 1200 சதுரஅடி வரை 75 சதவிகித சொத்து வரி உயர்த்தப்பட இருக்கிறது. ஏற்கனவே, 600 சதுரஅடிக்கு ரூபாய் 810 சொத்து வரி செலுத்தியவர்களுக்கு ரூ.1215  உயர்த்தப்பட்டிருக்கிறது.

1,201 சதுரஅடி முதல் 1,800 சதுரஅடி வரை 100 சதவிகித வரி உயர்வும், 1,801 சதுரஅடிக்கு மேலாக உள்ள வீடுகளுக்கு 150 சதவிகித சொத்து வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், வணிக வளாகங்களுக்கு 150 சதவிகித வரி உயர்வும், கல்வி நிலையங்களுக்கு 100 சதவிகித வரி உயர்வும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய சொத்து வரி உயர்வு அனைத்து தரப்பினரையும் பலமுனைகளில் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரி உயர்வு தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வர இருக்கிறது. தமிழக முதலமைச்சரின் பார்வைக்கு வராமல் இத்தகைய அறிவிப்பு செய்யப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

ஏற்கனவே, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வினால் அனைத்து பொருட்களின் விலையும்  உயர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிற பொதுமக்கள் இந்த சொத்து வரி உயர்வினால் மேலும் பாதிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அறிவிக்கப்பட்டுள்ள இந்த சொத்து வரி உயர்வை ஒரே கட்டமாக நடைமுறைக்கு கொண்டு வராமல், ஆண்டுக்கு 10 சதவிகித வரி உயர்வு என்ற அடிப்படையில் மறுபரிசீலனை செய்து புதிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com