
தமிழ்நாட்டின் உரிமைக்காகவே தில்லி சென்றதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தின் தலைவர் பொன் குமார் இல்லத் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நான் அண்மையில் துபைக்கு சென்றிருந்த நேரத்தில், ஏதோ பல கோடி ரூபாயை எடுத்துக்கொண்டு சென்றதாக முன்னாள் முதல்வர் – இன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி பேசிய செய்திகளையெல்லாம் நாம் பார்த்தோம். அதற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எனக்கு முன்னால் பேசியவர்களே அதற்குரிய விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள்.
அதையடுத்து அண்மையில் மூன்று நாட்கள் இந்தியாவின் தலைநகரமான தில்லிக்குப் பயணம் சென்று, நம்முடைய மாநிலத்தின் பிரச்னைகளை எல்லாம் பிரதமர் இடத்தில் - அதற்குரிய அமைச்சர்களிடத்தில் அந்தக் கோரிக்கைகளை எல்லாம் எடுத்துவைத்து உரிமைக்குக் குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.
இதையும் படிக்க- மதவாத சக்திகளை தடுக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வலியுறுத்தல்
அதையெல்லாம் மூடி மறைக்க - அதைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்ன சொன்னார்கள் என்றால், ஏதோ அச்சத்தின் காரணமாக - பயத்தின் காரணமாக சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிற என்னை அதிலிருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் போனேன் என்று சொல்கிறார்கள். ஒன்று மட்டும் உறுதியாக சொல்கிறேன். அங்கு சென்று யாருடைய காலிலும் விழுந்து, இதை எனக்கு செய்து தாருங்கள் என்று கேட்கவில்லை. தமிழ்நாட்டின் உரிமைக்காகத்தான் நான் போனேனே தவிர, வேறு அல்ல.
ஏனென்றால் நான் சாதாரண ஸ்டாலின் அல்ல – பதவியேற்றபோதே நான் சொன்னேன் ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’ என்றுதான் சொல்லியிருக்கிறேன்.
நான் கலைஞருடைய மகன். என்றைக்கும் தமிழ்நாட்டுக்காக உழைப்பேன். அவ்வாறு உழைக்கின்ற அந்த உழைப்பிற்கு பொன்குமாரும் எனக்குத் துணை
நிற்பார் என்று சொல்லி விடைபெறுகிறேன்.