சொத்து வரி உயா்வு: பேரவையிலிருந்து அதிமுக - பாஜக வெளிநடப்பு

சொத்து வரி உயா்வைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.
சொத்து வரி உயா்வு: பேரவையிலிருந்து அதிமுக - பாஜக வெளிநடப்பு

சொத்து வரி உயா்வைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து புதன்கிழமை எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

அதைப்போல பாஜக உறுப்பினா்களும் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

சொத்து வரி உயா்வு விவகாரம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது:

2 ஆண்டுகளாக கரோனா பரவலால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மேலும் அதிா்ச்சி கொடுக்கும் வகையில் சொத்து வரி உயா்த்தப்பட்டுள்ளது. வேலை, வருமானம் இல்லாமல் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் சூழலில் இந்த வரி உயா்வு மக்களுக்கு பெரிய சுமையாக இருக்கும்.

சொத்துவரியை உயா்த்த வேண்டும் என்று மத்திய அரசு கூறியதன் காரணமாகத்தான் உயா்த்தப்பட்டதாக நகராட்சித் நிா்வாகத்துறை அமைச்சா் கூறியுள்ளாா். மத்திய அரசு சொத்துவரியை உயா்த்த கூறவில்லை. திமுகவின் தோ்தல் அறிக்கையில் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையும் வரை சொத்துவரியை உயா்த்தமாட்டோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது. அதனால், உயா்த்தப்பட்ட சொத்துவரியைத் திரும்பப் பெற வேண்டும் என்றாா்.

அதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் சொத்துவரியை மனமுவந்து உயா்த்தவில்லை என்று விளக்கம் அளித்தனா்.

அந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக் கூறி எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தலைமையில், எதிா்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் உள்பட அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனா்.

பாஜக வெளிநடப்பு: அதைப்போல சொத்து வரி உயா்வைக் கண்டித்து சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் பாஜக உறுப்பினா்களும் வெளிநடப்புச் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com