கடந்த 6 நாள்களில் ரூ.60 லட்சத்திற்கு புத்தகங்கள் விற்பனை: ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

கடந்த 6 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சத்திற்கு புத்தங்கள் விற்பனையாகி உள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்ட நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்பும் அறிவுசார் நன்கொடையாளர்களுக்காக அறிவு பாலம் என்ற அரங்கை தொடங்கி வைத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்
திருவள்ளூர் மாவட்ட நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்பும் அறிவுசார் நன்கொடையாளர்களுக்காக அறிவு பாலம் என்ற அரங்கை தொடங்கி வைத்த ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்


திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட புத்தக திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரையில் ஆர்வத்துடன் வருகை தருவதன் மூலம் கடந்த 6 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சத்திற்கு புத்தங்கள் விற்பனையாகி உள்ளதாக ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.

திருவள்ளுர் மாவட்டத்தில் முதலாவது புத்தக திருவிழா கடந்த 1 ஆம் தேதி தொடங்கி, தொடர்ந்து 11 ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. இந்த புத்தக திருவிழா நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சியினை வெளிப்படுத்தும் வகையில் நாள்தோறும் ஒரு திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 6 ஆம் நாளான புதன்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை சார்பில் நமது மாவட்டத்தில் “சாலை பாதுகாப்பு” குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “நம்ம திருவள்ளுரு விபத்தில்லா ஊரு” என்ற இலச்சினையும் அவர் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து தேர்வுக்கு ஒரு திறவுகோல் என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர் சங்கர சரவணன், வாசிப்புப் பண்பாடு என்ற தலைப்பில் ச.தமிழ்செல்வன், உணர்ச்சிகளை வென்றால் உன்னத வாழ்வு என்ற தலைப்பில் சிறப்பு திறன் கொண்ட பேச்சாளர் இன்ஸ்பயர் இளங்கோ ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு நன்கொடையாக வழங்க விரும்பும் அறிவு சார் நன்கொடையாளர்கள் புத்தகங்கள் வழங்க அறிவு பாலம் என்ற அரங்கையும் தொடங்கி வைத்து, புத்தக பார்சல்களையும் அவரிடம் வழங்கினர். அதையடுத்து தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்கம் சார்பில் அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கான போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் மற்றும் காப்பாளர் சங்கம் சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி மேம்படுத்துவதற்காக ரூ.20 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களையும் அவரிடம் வழங்கினர்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: மாணவ, மாணவிகளிடையே வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த புத்தகங்கள் மூலம் அறியாததையும் அறிந்து கொள்ளவும் பேருதவியாக இருக்கும் புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும். இந்த புத்தக திருவிழாவில் கடந்த 6- நாள்களாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரையிலான வாசகர்கள் 34 ஆயிரம் பேர் வரையில் புத்தக அரங்குகளை பார்வையிட்டு, சிறப்பு நிகழ்ச்சிகளையும் கண்டு களித்தனர். இதுவரையில் கடந்த 6 நாள்களில் மட்டும் ரூ.60 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. எனவே இன்னும் 5 நாள்கள் நடைபெற உள்ள புத்தக திருவிழாவில் ஏராளமானோர் வருகை தந்து புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ஜெயஸ்ரீ, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஆர்.இளமுருகன், வட்டாட்சியர் தமிழ்செல்வன், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com