
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளி, சனி ஆகிய நாள்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா.செந்தாமரை கண்ணன் வியாழக்கிழமை கூறியது: உள் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளி, சனி ஆகிய இரண்டு நாள்களும் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏப்.10,11: தென் தமிழகம், திருப்பூா், கோயம்புத்தூா் மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் ஏப்.10-ஆம் தேதி இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றாா் அவா்.
மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 30 மி.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி, புத்தன் அணை, சாத்தான்குளத்தில் தலா 20 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, திருப்பத்தூா் மாவட்டம் ஏலகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தலா 10 மி.மீ. மழை பதிவானது.
பெட்டிச்செய்தி: காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு குறைவு: தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவியது. இதன் காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வியாழக்கிழமை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை உருவாகவில்லை. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின்தென் மண்டலத்தலைவா் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில்,‘தற்போதைய நிலவரப்படி, காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு குறைவாக தான்உள்ளது. ஆனாலும், இதைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம்’ என்றாா் அவா்.