
பங்குனித் திருவிழாவில் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்
அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயில் பங்குனித் திருவிழாவில் 8ஆம் திருவிழாவான செவ்வாய்க்கிழமை நூற்றுக்கணக்கான பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
அம்பாசமுத்திரத்தில் செங்குந்தர் சமுதாயத்திற்குப் பாத்தியப்பட்ட அகஸ்தீஸ்வரர் கோயிலில் பங்குனித் திருவிழா ஏப்.5இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை, இரவு பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதி உலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. ஏழாம் திருநாளான திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம் ஆராதனையைத் தொடர்ந்து இரவு பூம்பல்லக்கில் சுவாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
8ஆம் திருநாளான ஏப்.12 செவ்வாய்கிழமை காலை 6 மணிக்கு பச்சை சாத்தி வீதி உலாவைத் தொடர்ந்து 10.30 மணிக்கு நேர்த்திகடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தாமிரவருணியில் பக்தர்கள் நீராடி தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர். மேலும் மேலப்பாளையம் தெருவிலிருந்து நூற்றுக்கணக்கான ஆண் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், பெண் பக்தர்கள் கும்பிடு நமஸ்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
மாலை 6.30 மணிக்கு அகஸ்தியருக்கு சுவாமி அம்பாள் திருமணக் கோலத்தில் காட்சியளித்தலும் 10ஆம் திருநாள் காலை 10.30 மணிக்கு தீர்த்தவாரியும் நடைபெறுகிறது. விழாவில் அம்பாசமுத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...