'என்னம்மா இவ்வளவு காரம்?' ஸ்டாலின் கேள்விக்கு நரிக்குறவ பெண்மணி அளித்த பதில்

என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, எங்களிடத்தில் கரோனா கூட வரமுடியாது என்று பெருமையோடு சொன்னார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
'என்னம்மா இவ்வளவு காரம்?' ஸ்டாலின் கேள்விக்கு நரிக்குறவ பெண்மணி அளித்த பதில்
'என்னம்மா இவ்வளவு காரம்?' ஸ்டாலின் கேள்விக்கு நரிக்குறவ பெண்மணி அளித்த பதில்

ஒரு சகோதரி வீட்டில் கறி சோறு சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறேன். கொஞ்சம் காரமாக இருந்தது. என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, காரமாக சாப்பிட்டால்தான் நாங்கள் பலத்தோடு, ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். எங்களிடத்தில் கரோனா கூட வரமுடியாது என்று பெருமையோடு சொன்னார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆவடியில் உள்ள நரிக்குறவர் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரையில், நீங்கள் நன்றாக இருந்தால், நான் மட்டுமல்ல, இந்த நாடே நன்றாக இருக்கும். இப்பொழுது கூட ஒரு சகோதரி வீட்டில் உட்கார்ந்து கறி சோறு சாப்பிட்டுவிட்டு இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். 
 

கொஞ்சம் காரமாக இருந்தது. என்னம்மா இவ்வளவு காரமாக இருக்கிறது என்று கேட்டதற்கு, காரமாக சாப்பிட்டால்தான் நாங்கள் பலத்தோடு, ஆரோக்கியத்தோடு இருக்க முடியும். எங்களிடத்தில் கரோனா கூட வரமுடியாது என்று பெருமையோடு சொன்னார்கள். ஆகவே, நான் கற்றுக்கொண்டேன். இனிமேல், நானும் இன்றிலிருந்து காரம் அதிகமாக சேர்த்துக் கொள்ள போகிறேன். 

அது உங்கள் மூலமாக இப்பொழுது தெரிந்து கொண்டேன். இன்றைக்கு நலத்திட்டங்கள், நலத்திட்டத்தின் அடிப்படையில் பல உதவிகள், உதவி செய்யக்கூடிய சில நிகழ்ச்சிகள் நடக்கப் போகிறது. 

அதற்காகத்தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஊரைப்பற்றி, இந்த ஊரில் உள்ள உங்களைப்பற்றி, உங்களுக்கு ஏற்கனவே இருந்த சங்கடங்கள், பிரச்சனைகள், தொல்லைகள், துன்பங்கள் எப்படியெல்லாம் இருந்தது, இப்பொழுது எப்படியெல்லாம் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அனைத்தும் சரி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் பற்றி நாசர்  உங்களிடத்தில் விளக்கமாக பேசியிருக்கிறார்.

நான் ஒரு சில மாதங்களுக்கு முன்னால், ஒரு நாள் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு செய்தியைப் பார்த்தேன். என்ன என்று சொன்னால், அந்த செய்தி வாட்ஸ்அப்பில் வந்தது. மாமல்லபுரம் அருகில் உள்ள பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி, எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுகிற நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சிக்கு நரிக்குறவர் பெண்ணுக்கு உணவளிக்க மறுத்து இருக்கிறார்கள். உள்ளே விட மறுத்திருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் பகுதியில் இருக்கின்ற ஒரு பெண் எதைப் பற்றியும் கவலைப்படாமல், அச்சப்படாமல் அதை அப்படியே செய்தியாக்கி அதை வீடியோவில் பேசியதை நானும் பார்த்தேன். அந்த உணவளிக்கக் கூடிய நிகழ்ச்சியில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை அனுமதிக்காமல் இப்படி ஒரு கெட்ட காரியத்தை செய்திருக்கிறார்களே என்று நான் கோபப்பட்டேன்,  உடனே அறநிலையத்துறை அமைச்சர் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இந்தச் செய்தியை சொன்னேன். நீங்கள் பார்த்தீர்களா, நான் தொலைக்காட்சி மற்றும் வாட்ஸ்அப்பில் பார்த்தேன். அங்கே சாப்பாடு போடுகின்ற இடத்தில் நரிக்குறவர் இனத்தைச் சார்ந்து இருக்கக்கூடிய ஒரு பெண்ணை அனுமதிக்காமல், ஒரு கொடுமையை செய்திருக்கிறார்களே, இது நியாயமா? உடனடியாக நீங்கள் அங்குப் போகவேண்டும். என்னவென்று விசாரியுங்கள். அந்தப் பெண்ணை அந்தக் கோயிலில் உட்கார வைத்து எல்லோருக்கும் மத்தியில் உட்கார்ந்து அவரை சாப்பிட வைக்கவேண்டும். 

அதுமட்டுமல்ல, அமைச்சராக இருக்கக்கூடிய நீங்களே அருகில் இருந்து சாப்பிட வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அதற்குப் பிறகு அவர் அந்த இடத்திற்குச் சென்று உடனே அந்தப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து, அந்தக் கோயிலில் நடைபெறுகின்ற அன்னதானத்தில் பங்கேற்க வைத்து அருகில் அமர்ந்து உணவு அருந்திய காட்சியை நான் பார்த்த பிறகுதான் எனக்கு நிம்மதி ஆனது. சந்தோஷமானது.

இது எனக்கு பெருமை என்பதைவிட தைரியமாக அந்தப் பெண் வாதாடியதுதான் எனக்குப் பெருமை. அந்தப் பெண் பெயர் அஸ்வினி. ஆகவே, அந்தப் பெண் வாதாடி, போராடி அதை வெளிப்படுத்தியது உள்ளபடியே அந்தப் பெண்ணுக்கு இங்கிருந்தே என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பிறகு அந்தப் பெண்ணுடைய குடும்பச் சூழ்நிலை என்ன? அந்தப் பெண் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய, பகுதியில் இருக்கக்கூடிய நிலைமைகள் என்ன? என்பதைப் பற்றி குறைகளை எல்லாம் கேட்டு, அப்பெண், அவரது உறவினர்கள் வாழும் பூஞ்சேரி கிராமத்திற்கு நானே நேரடியாக 4.11.2021 அன்று சென்றேன். அங்குள்ள நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின மக்களையெல்லாம் நேரடியாகச் சந்தித்தேன்.

அவர்கள் ஒவ்வொருவரிடமும் பேசினேன். கருத்துக்களைக் கேட்டேன். உங்கள் குறைகள், என்ன? உங்கள் பிரச்சனைகள் என்ன? தைரியமாக வந்து சொல்லுங்கள். அதையெல்லாம் இந்த அரசு நிச்சயமாக உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும், படிப்படியாக, நிச்சயமாக, உறுதியாக நாங்கள் செய்து முடிப்போம். தைரியமாக எது இருந்தாலும் சொல்லுங்கள் என்று சொல்லி கேட்டேன். பல பிரச்சனைகளை எல்லாம் சொன்னார்கள். அதில் முக்கியமாக நீண்ட காலமாக அவர்களுக்கு வழங்கப்படாத வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு மனைப் பட்டாக்கள், சாதிச் சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை இது எல்லாம் வழங்கப்படாமல் இருந்தது. 4.53 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நானே அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதை வழங்கி இருக்கிறேன். இந்த நிகழ்வு பூஞ்சேரியில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில் இந்தப் பிரச்சனை இருக்கிறது.

அதற்குப் பிறகு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் நான் உத்தரவிட்டேன். நரிக்குறவர்கள், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் வசிக்கும் ஒவ்வொரு கிராமங்களையும் நீங்கள் சென்று ஆய்வு செய்து, அந்த ஒவ்வொரு குடும்பத்திற்குமான அரசின் நலத்திட்ட உதவிகள் என்னென்ன தேவைப்படுகிறது என்பதற்கு ஒரு பட்டியல் எடுத்து, ஆய்வு செய்து, அந்த அறிக்கையை உடனடியாக அனுப்பிட வேண்டுமென்று நான் உத்தரவிட்டேன்.

அதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஒரு இயக்கமாகவே நடத்தப்பட்டு கடந்த நான்கு, ஐந்து மாதங்களில் நரிக்குறவர், பழங்குடியின மக்கள், இதர விளிம்புநிலை மக்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 

புள்ளிவிவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், இதுவரைக்கும்,
2 ஆயிரத்து 84 குடும்பங்களுக்கு புதிய கான்கிரீட் வீடுகளும்,
701 குடும்பங்களுக்கு கழிவறை வசதிகளும்,
2 ஆயிரத்து 91 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகளும்,
226 வீடுகளுக்கு மின்சார இணைப்புகளும்,

5 ஆயிரத்து 991 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும்,
7 ஆயிரத்து 824 குடும்பங்களுக்கு குடும்ப அட்டைகளும்,
2 ஆயிரத்து 860 குடும்பங்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக்
காப்பீட்டுத் திட்ட அட்டைகளும்,
9 ஆயிரத்து 468 நபர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகளும்,
15 ஆயிரத்து 290 நபர்களுக்கு சாதி சான்றிதழ்களும்,
3 ஆயிரத்து 437 நபர்களுக்கு நலவாரிய அட்டைகளும்,
465 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி அட்டைகளும்,
3 ஆயிரத்து 147 நபர்களுக்கு முதியோர் ஓய்வூதியமும்,
339 நபர்களுக்கு மாற்றுத் திறனாளி ஓய்வூதியமும்,
233 ஆதரவற்றோருக்கு ஆதரவற்றோர் உதவித் தொகையும்,
1,564 பெண்களுக்கு விதவைகள் ஓய்வூதியமும்,
39 திருமணமாகாத பெண்களுக்கான உதவித் தொகையும்,
7 ஆயிரத்து 955 நபர்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட அட்டைகளும்,
507 தெரு விளக்குகளும்,
37 குடியிருப்புகளில் வடிகால் வசதிகளும்,
152 குடியிருப்புகளில் சாலை வசதிகளும்,
67 குடியிருப்புகளில் குடிநீர் வசதிகளும்,
127 ஆண்களுக்கு திறன் பயிற்சிகளும்,

228 பெண்களுக்கு திறன் பயிற்சிகளுக்கு அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப் பெரிய சாதனை. இவ்வளவு கொடுத்ததற்குப் பிறகும் இன்னும் மீதம் இருக்கிறது. நான் இல்லை என்று மறுக்கவில்லை. அதனால் மேலும், வழங்கப்படவேண்டிய நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வரும் மே மாதம் இறுதிக்குள் நிச்சயமாக இவைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இப்படி நரிக்குறவர், பழங்குடியின மக்கள், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு நீங்கள் தேடி வர தேவையில்லை, நாங்களே தேடி வந்து அந்த உதவிகளைச் செய்யக்கூடிய ஒரு அரசாக இந்த அரசு, எங்கள் அரசு என்று கூட நான் சொல்லமாட்டேன். நம்முடைய அரசு, ஏன் என்றால் நீங்கள் அதில் இருக்கிறீர்கள்.

நமது அரசு என்றால், இது உங்களுடைய அரசு. இது விளிம்புநிலை மக்களுக்கான அரசு. ஆகவேதான் அவர்களை ஒவ்வொரு குடும்பமாகத் தேடி ஒவ்வொரு அடிப்படை தேவைகளை முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வருகிறோம். பெண்ணுரிமைக்காகப் போராடிய இயக்கம் நம்முடைய திராவிட இயக்கம். அந்த இயக்கம் ஆட்சியிலிருந்தபோதெல்லாம் பெண்ணுரிமையை நிலைநாட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பெண்ணுரிமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவி திவ்யா, அவர்கள் காணொலியில் பேசியதை நான் பார்த்தேன். பார்த்தவுடனே நான் ஆவடி நாசருக்கு தொடர்பு கொண்டேன். அந்த வீடியோவை அனுப்பி வைத்தேன். அவரும் சொன்னார், நானும் பார்த்தேன். அதற்குரிய நடவடிக்கைகள் எல்லாம் நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறோம். சரி மறுபடியும் சென்று அங்கிருந்து என்னென்ன பிரச்சனைகளைக் கேட்டு, அங்கிருந்து  மக்களோடு மக்களாக இருந்து கைப்பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் உடனடியாக இங்கிருந்து என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள். ஆகவே நான் இங்குள்ள மக்களோடு மக்களாக இருக்கிறேன். அங்குப் பேட்டி கொடுக்க ஏற்கனவே கைப்பேசி வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்த, அந்த திவ்யா அருகில்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். வீடியோ அழைப்பில் நானே பேசினேன். 'என்னம்மா, திருப்தியா, குறைகளையெல்லாம் உடனடியாக கேட்டிருக்கிறோமே, நான் அமைச்சரை மட்டுமல்ல, ஒரு பத்து நாட்களுக்குள் எப்பொழுது வாய்ப்பு கிடைக்குமோ, ஏன் என்றால், சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த வாய்ப்பை நான் எப்படி என்று யோசித்து, உடனடியாக நான் வருகிறேன். வந்தால் சாப்பாடு போடுவீர்களா?' என்று கேட்டேன். நிச்சயமாக வாருங்கள், கறி சோறே போடுகிறோம் என்று அங்கு இருந்தவர்கள் சொன்னார்கள். அந்த டிப்படையில்தான் இன்றைக்கு உங்களை எல்லாம், சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது.

விளிம்புநிலை சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள், துணிச்சலாகப் பேசுவதைப் பார்த்து உள்ளபடியே ஆச்சரியமாக இருக்கிறது, மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

இதுதான் திராவிட இயக்கத்தின் பெண்ணுரிமைக் குரல், இந்தப் பெண் பிள்ளை வழியாக இன்றைக்கு ஒலிக்கக்கூடிய காட்சியை நாம் பார்க்கிறோம். அதனால்தான் விளிம்புநிலை மாணவிகள், திவ்யா, பிரியா, தர்ஷிணி ஆகிய மூன்று பேரையும் கோட்டையில் உள்ள எனது அறைக்கே அழைத்துப் பேசினேன்.

பெண்ணுரிமைக்காகப் போராடிய திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, இந்த வெற்றி என்பதை நான் பெருமையோடு சொல்கிறேன்.

ஆகவே அந்த வெற்றியை யார் மூலமாகப் பார்க்கிறேன் என்றால், அஸ்வினி வடிவிலும், திவ்யா வடிவிலும். உள்ளபடியே நான் நெகிழ்ந்து போனேன், மகிழ்ச்சியடைந்தேன். அதனால்தான் எப்படி அஸ்வினி வீட்டிற்குப் போனேனோ, அதே போல் இன்று திவ்யா, தர்ஷிணி வீட்டிற்கும் வந்திருக்கிறேன்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில்தான் திருநங்கைகளுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும், நசுக்கப்பட்டவர்களுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து பல்வேறு திட்டங்களையெல்லாம் நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார். அவர்கள் வழியில் இந்த ஆட்சி நிச்சயமாக செயல்படும், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

நமது அரசு நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் அப்படியொரு ஒரு அணையா விளக்கை ஏற்றிடும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். அதனுடைய  எடுத்துக்காட்டுதான் இந்த நிகழ்ச்சி. நான் எத்தனையோ நிகழ்ச்சிக்குப் போயிருந்தாலும், ஏற்கனவே நான் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தேன். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தேன். துணை முதலமைச்சராக இருந்தேன். இப்போது உங்கள் அன்போடும், ஆதரவோடும் முதலமைச்சராக பொறுப்பேற்றுப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆகவே இந்தப் பொறுப்புகள் இருந்தபோது, எந்த நிகழ்ச்சிக்கெல்லாம் சென்றிருந்தாலும் இது போன்ற உங்களைப் போல மகிழ்ச்சியோடு உங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிற போது உள்ளபடியே அளவிடாத மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே இந்த அரசு உங்களுக்காக என்றைக்கும் துணைநிற்கும். நீங்கள் எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, என்ன பிரச்சனை இருக்கிறதோ, அதற்கெல்லாம் சட்டரீதியாக நிச்சயமாக  அதையெல்லாம் நாங்கள் நிறைவேற்றி தருவோம் என்ற உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன் என்றார் முதல்வர் ஸ்டாலின். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com