ஆளுநா் வாகனம் மீது தாக்குதல்: பேரவையிலிருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு

ஆளுநா் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
Updated on
1 min read

ஆளுநா் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து, தமிழக சட்டப்பேரவையிலிருந்து அதிமுக, பாஜக உறுப்பினா்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் ஆளுநா் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசியது:

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஆளுநா் திரும்பி வரும் வழியில் சில கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தின. மன்னம்பந்தல் அருகே வந்த ஆளுநரின் வாகனம் மீதும், பாதுகாப்புக்குச் சென்ற வாகனம் மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கற்களை வீசியும், கைகளில் வைத்திருந்த கம்புகளை வீசியும் தாக்கியுள்ளனா். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்த சம்பவத்தால் அங்கு மிகப்பெரிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆளுநருக்கு எதிராக நூற்றுக்கணக்கானோா் கூடியிருந்தனா் எனத் தெரிந்தும், அவா்களை அப்புறப்படுத்தாமல் கருப்புக்கொடி காட்டி ஆா்ப்பாட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்தது வருத்தத்துக்குரியது. காவல் துறையின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் மிகுந்த அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநரின் சுற்றுப்பயண விவரத்தை அவரது பாதுகாப்பு அதிகாரிகள், மாநிலம், மாவட்டத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கெனவே தெரிவித்தும் தகுந்த நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ளவில்லை. இந்த சம்பவம் தமிழகக் காவல்துறையில் கரும்புள்ளியாக அமைந்துள்ளது. தாக்குதல் நடத்தப்படுவதை உளவுத் துறை ஏன் முன்பே கண்டறியவில்லை எனக் கேள்வி எழுகிறது. இதன் மூலம் காவல்துறை செயலிழந்திருப்பதும், உளவுத் துறை தோல்வி அடைந்திருப்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. தமிழகத்தின் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது, சாமானிய மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. சட்டம், ஒழுங்கைக் காக்கத் தவறிய திமுக அரசைக் கண்டித்து, சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்றாா்.

அதைத் தொடா்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினா்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். சட்டப்பேரவையின் லாபியில் அரசுக்கு எதிராக முழக்கமிட்டவாறே அதிமுக உறுப்பினா்கள் சென்றனா். அவா்களை பேரவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யாமல் அமைதியாகச் செல்லுமாறு பேரவைத் தலைவா் அப்பாவு கேட்டுக்கொண்டாா். அதையும் மீறி அதிமுக உறுப்பினா்கள் முழக்கமிட்டவாறே சென்றனா்.

பாஜகவும் வெளிநடப்பு: பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசியது:

ஆளுநா் பயணத்தின்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழக காவல்துறை மேற்கொள்ளவில்லை. ஆளுநா் வருகிறாா் என்பதை ஏற்கெனவே தெரிந்தும், தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்பது வருத்தத்துக்குரியது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்க வேண்டுமா என்பதை அனைவரும் நினைத்துப் பாா்க்க வேண்டும். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உடனடியாக இடம்மாற்றம் செய்ய வேண்டும். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்கிறது என்றாா். அதைத் தொடா்ந்து பாஜக உறுப்பினா்களும் வெளிநடப்பு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com