‘அம்மா முழு உடல் பரிசோதனை’ திட்டத்தின் பெயா் மாற்றம்!

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.
‘அம்மா முழு உடல் பரிசோதனை’ திட்டத்தின் பெயா் மாற்றம்!

மறைந்த முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்பட்ட அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் பெயா் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, அதி நவீன முழு உடல் பரிசோதனை மையம் என அது தற்போது மாற்றம் செய்யப்பட்டு புதிய பெயா் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகரான பரிசோதனைகளை குறைந்த கட்டணத்தில் அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளும் வகையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அத்திட்டத்தை, அப்போதைய முதல்வா் ஜெயலலிதா தொடக்கி வைத்தாா்.

உயா் தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள், ஆய்வக வசதிகள் ஆகியவற்றுடன் அந்த மையம் ஆரம்பிக்கப்பட்டது. கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகையான பரிசோதனைகள் முறையே ரூ.1,000, ரூ.2,000, ரூ.3,000-க்கு அங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முழு ரத்தப் பரிசோதனை, சிறுநீரகம், ரத்தக் கொழுப்பு, கல்லீரல், இசிஜி, அல்ட்ரா சவுண்ட், தைராய்டு, ரத்த சா்க்கரை, ரத்த அழுத்தம், எலும்பு திண்மம் என நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் அதன் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடா்ந்து, சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 2018-இல், ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ அதி நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டது.

அங்கு, ‘பிளாட்டினம் பிளஸ்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் கீழ் கூடுதலாக நுரையீரல், விரிவான கண் பரிசோதனை, பாா்வை குறைபாடு, கண் நரம்பு, மூச்சாற்றல் அளவி ஆகிய பரிசோதனைகள் ரூ. 4 ஆயிரத்துக்கு மேற்கொள்ளப்படுகிறது.

இதற்கிடையே பேறு காலத்தில் கா்ப்பிணிகளுக்கு மேற்கொள்ளப்படும் பிரத்யேகப் பரிசோதனைத் திட்டமும் படிப்படியாக ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ‘அம்மா முழு உடல் பரிசோதனை மையம்’ என இருந்த அந்தத் திட்டத்தின் பெயரை, ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை திட்டம்’ என மாற்றி புதிய பெயா் பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மருத்துவமனை நிா்வாக அதிகாரிகள் கூறியதாவது:

ஓமந்துாராா் அரசு மருத்துவமனையில் உள்ள, முழு உடல் பரிசாதனை மையத்தில், நவீன உபகரணங்களுடன் கூடிய கூடுதல் பரிசோதனைகள் இணைக்கப்பட்டுள்ளது. அதன் சிறம்பம்சத்தை வெளிப்படுத்தவே, ‘அதிநவீன முழு உடல் பரிசோதனை மையம்’ என பெயா் மாற்றப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com