நீங்கள் வரியை அதிகரித்தபோதெல்லாம் அதிகரித்திருந்தால் இப்போது குறைக்கலாம்: பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகரித்தபோதெல்லாம் நாங்களும் 6 மடங்கு அளவுக்கு அதிகரித்திருந்தால் இப்போது குறைத்திருக்கலாம் என்று பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
நீங்கள் வரியை கூட்டியபோதெல்லாம் கூட்டியிருந்தால் இப்போது குறைக்கலாம்: பழனிவேல் தியாகராஜன்
நீங்கள் வரியை கூட்டியபோதெல்லாம் கூட்டியிருந்தால் இப்போது குறைக்கலாம்: பழனிவேல் தியாகராஜன்

சென்னை: மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை அதிகரித்தபோதெல்லாம் நாங்களும் 6 மடங்கு அளவுக்கு அதிகரித்திருந்தால் இப்போது குறைத்திருக்கலாம் என்று பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு பேரவையில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில், நேற்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை பேசுகையில, பிரதமர் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் காணொலி வாயிலாக பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

அதில், பெட்ரோல்,  டீசல் விலை கூட்டு மதிப்பீட்டு வரியை சில மாநிலங்கள் குறைக்கவில்லை. குறிப்பாக எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் குறைக்கவில்லை. பிடிவாதமாக இருக்கிறது என்று கூறியிருந்தார். அது குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதற்கு முதலில் தமிழக முதல்வர் விளக்கம் அளித்தார். பிறகு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்தார்.

அப்போது, கொள்கை அடிப்படையில் முதலில் சொல்கிறேன்,

எந்த ஒரு அரசும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது. இன்னும் சொல்லப்போனால் எங்கெல்லாம் சிறந்த வாழ்க்கை முறை இருக்கிறதோ, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அரசின் வருமானம் உற்பத்தியில் சுமார் 30 சதவீதமாக  இருக்கும். அங்கெல்லாம் இலவச கல்வி, மகப்பேறு விடுமுறை, பல்கலை வரை இலவச கல்வி என எந்த வகையிலும் ஏழைகளே இல்லாத சூழ்நிலைய உருவாக்க முடியும். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளிலும் உற்பத்தியில் 20 சதவீதம் வருமானம் இருக்கும்.

ஆனால் நாம் வளர்ந்துவரும் நாடு என்பதால், நமக்கு உற்பத்தியில் வரும் வருமானமே குறைவுதான், அதில் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைவு. ஆகையால் நிறைய மக்களுக்கு நிறைய செய்ய முடிவதில்லை.

எனவே வரி இல்லாமல் வருமானம் இல்லாமல் செலவு செய்ய முடியாது. அதன்படி பார்த்தால் எதற்காக யாரிடமிருந்து வரியை பிடித்தம் செய்கிறோம், அதனை சரியான முறையில் செலவிடுகிறோமா என்று பார்க்க வேண்டும்.

வரி வகுக்கும் போது நேரடி வரி என்றால் பணக்காரர்களிடமிருந்து கூடுதல் வரியை பிடித்தம் செய்ய முடியும். மறைமுக வரி என்றால், யாரிடமிருந்து எடுக்கிறோம் என்று தெரியாமல் அதாவது விற்பனை வரி ஜிஎஸ்டி போன்றவை பெறும் போது ஏழைகள் அதிகம் செலவிடும் நிலை இருக்கும்.

பால் விலை குறைத்தால் அது அனைவருக்கும் பலன் கிடைக்கும். ஆனால் பேருந்து விலை குறைப்பது என்றால் அதில் பயணிப்பவர்கள் யார் என்பதை கண்காணிப்பது கடினம்.

அதுபோல மின் கட்டணம், யார் அதிகம் பயன்படுத்துகிறார்களோ சொத்து வைத்திருக்கிளார்களோ அவர்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க முடியும்.

ஆனால் பெட்ரோல், டீசல் விலை என்று வரும் போது இரண்டு பிரச்சனை. யார் அதிக பெட்ரோல், டீசல் வாங்குகிறார்கள் என்பதை கணக்கிட முடியாது. அதன் வரியை அதிகரித்தால் மக்கள் பாதிப்பார்கள். பெட்ரோல், டீசல் பல தொழில்களுக்கும் செலவினத் தொகையாக இருப்பதால் அது விலை அதிகரித்தால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரம் பாதிக்கும்.

அடிப்படைத் தத்துவமாக திமுக ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல், டீசல் வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. ஏற்கனவே திமுக ஆட்சியில் 3 முறை, தற்போது ஒரு முறை குறைத்துள்ளது.

தற்போது மத்திய அரசையும் மாநில அரசையும் ஒப்பிட்டுப் கணக்கு மட்டும் பார்க்கலாம்.
கடந்த 2014-ல் தற்போதைய பிரதமர் ஆட்சிக்கு வந்தபோது,  மொத்த வரி பெட்ரோல் மீது ரூ.9.40 பைசா. பெரும்பான்மை மாநில அரசுக்கு பகிர்ந்து கொடுக்கக் கூடியது வரியாக இருந்தது. 

ஆனால், தற்போது பெட்ரோல் மீதான இந்த 5 ரூபாய் குறைப்பதற்கு முன்னால் மத்திய அரசின் வரி 32 ரூபாய். அதாவது 7 வருடத்தில் 3 மடங்குக்கு மேல் வரியை உயர்த்திவிட்டு அதன்பிறகு 5 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். மொத்த உயர்வு 200 சதவீதத்துக்கும் மேல்.

அதேப்போல டீசல் 7 ஆண்டுகளுக்கு முன்பு வரி ரூ.3.37 பைசா. இப்போது ரூ.10 ரூபாய் குறைத்த பிறகும் மத்திய அரசின் வரி ரூ.22 ஆக இருக்கிறது. ஆட்சிக்கு வந்த பிறகு உயர்த்தியது 7 மடங்கு.

இதனால் மத்திய அரசின் மொத்த வருமானே நேரடி வருமானத்தின் சதவீதம் குறைந்து மறைமுகவரிதான் வருகிறது. 

இன்றைக்கு மாநிலத்தின் வரி ரூ.22.50 பைசா. இதன்படி 50 சதவீதம் வரி அதிகரித்திருக்கிறது அவர்களுடைய வரி 300 சதவீதம் அதிகரித்துள்ளது. 
இதுபோல டீசலில் மாநில வரி இன்று ரூ.18.45. இரண்டு மடங்குக்கு கொஞ்சம் அதிகம். அவர்களுக்கு 6 மடங்கு அதிகம். இதையெல்லாம் மத்திய அரசு செய்துவிட்டு, நம்மைக் குறைக்கச் சொல்கிறார்கள்.

மத்திய அரசு எப்போதெல்லாம் வரியை அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் நாங்கள் அதிகரித்து அதாவது 6 மடங்கு அதிகரித்த போது நாங்களும் 6 மடங்கு அதிகரித்திருந்தால், இப்போது நாமும் 1 மடங்கு குறைக்கலாம். ஆனால் மாநிலஅரசு அப்படி செய்யவில்லை. இப்போது மட்டும் நாங்க குறைக்கும் போதெல்லாம் குறைக்கவில்லை என்று மத்திய அரசு கேட்பது நியாயமா?

எந்த மாநிலமும் குறைக்கவில்லை என்று சொல்வதும் தவறு. அதற்கு முன்பே முதல்வர் சொல்லி இங்கு வரி குறைக்கப்பட்டுவிட்டது. நாங்கள் குறைக்காததால் கூட்டாட்சி தத்துவத்துக்கு விரோதி என்கிறார்கள். 
இதில், வேதனை அளிப்பது என்னவென்றால் மொத்த வருமானத்தில் 20 சதவீதமம் பகிர்ந்து கொள்ளாமல் மாநிலத்துக்கு கொடுக்காமல் இருப்பது கூட்டாட்சி தத்துவமா? 

முழு செலவை நாங்கள்  செய்து மருத்துவக் கல்லூரிகளை நடத்தும் போது என் தேர்வில்தான் சேர்க்கை நடைபெற வேண்டும் என்கிறீர்கள், மாநிலங்களிலிருந்து ஒரு ரூபாய் வரி கொடுத்தால் தற்போது 35 பைசா தான் திரும்ப வருகிறது என்று பதில் அளித்துள்ளார் பழனிவேல் தியாகராஜன்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com