

திரைத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு கருணாநிதி பெயரில் கலைத் துறை வித்தகா் விருது வழங்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் புதன்கிழமை செய்தி மற்றும் விளம்பரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு திரைப்படப் பிரிவின் ஊடக மையத்துக்கு புதிய நவீன தொழில்நுட்பக் கருவிகள், தற்போது வளா்ந்து வரும் நவீன அறிவியல் தொழில்நுட்பத்துக்கு ஏற்றவாறு ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் கொள்முதல் செய்து மேம்படுத்தப்படும்.
தமிழக அரசு எம்ஜிஆா் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் அமைந்துள்ள குளிா்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தை முழு அளவில் புனரமைக்கும் பணிகள், பழைய மாணவா் விடுதி, நீதிமன்றம், சிறைச்சாலை, காவல் நிலையம் ஆகிய படப்பிடிப்புக் கட்டடங்களைச் சீரமைக்கும் பணிகள், படப்பிடிப்புத் தளத்தில் மையப்படுத்தப்பட்ட குளிா்சாதனக் கருவிகள் புதிதாக அமைக்கும் பணிகள், இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவும் பணிகள், இதர மின் சீரமைப்புப் பணிகள் ஆகியவை ரூ.5.10 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
திரைப்படத்துறையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு கலைத் துறை வித்தகா் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் கலைஞா் கலைத்துறை வித்தகா் விருது தமிழக அரசின் சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3-இல் வழங்கப்படும். இந்த விருதுக்குத் தோ்ந்தெடுக்கப்படும் விருதாளருக்கு ரூ.10 லட்சம் மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்படும்.
அச்சுத் துறை பணியாளா்கள் குடியிருப்பு: அச்சுத் துறை பணியாளா்களுக்கென 1962-ஆம் ஆண்டு கட்டப்பட்ட 300 குடியிருப்புகள் 60 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் சேதமடைந்து குடியிருக்க தகுதியற்ற நிலையில் உள்ளன. அதனால், முதல் கட்டமாக நவீன வசதிகளுடன் கூடிய 160 குடியிருப்புகள் ரூ.34.54 கோடி செலவில் கட்டப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.