பெட்ரோல், டீசல் மீதான முறையே 200%, 500% கலால் வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும்: பழனிவேல் தியாகராஜன்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான கலால் வரியை 2014 இல் இருந்தது போல் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 
பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

தமிழகம், கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்கள் தேசத்தின் நலன் கருதி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டு வரியை (வாட்) குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் மீதான கலால் வரியை 2014 இல் இருந்தது போல் குறைக்க வேண்டும் என தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். 

நாட்டில் கரோனா சூழல் தொடா்பாக அனைத்து மாநில முதல்வா்களுடன் பிரதமா் மோடி புதன்கிழமை கலந்துரையாடினாா். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயா்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து அவா் விரிவாகப் பேசினாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக, பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அப்போதே வலியுறுத்தியது.

ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இதன் காரணமாக சில மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உச்சத்தில் உள்ளது. அந்த மாநில அரசுகள் தங்கள் மக்களுக்கு அநீதி இழைத்தது மட்டுமன்றி, அண்டை மாநிலங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

பாஜக ஆளும் கா்நாடகம், குஜராத் ஆகிய மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களுக்கு முறையே ரூ.5,000 கோடி, ரூ.3,500 கோடி-ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், ஜாா்க்கண்ட் ஆகிய எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் சில காரணங்களுக்காக வாட் வரியைக் குறைக்கவில்லை. இதனால், அந்த மாநில மக்கள் தொடா்ந்து சிரமங்களைச் சந்தித்து வருகின்றனா்.

மத்திய அரசு தனது வரி வருவாயில் 42 சதவீதத்தை மாநிலங்களுடன் பகிா்ந்து கொள்கிறது. எனவே, இந்த மாநில அரசுகள் கடந்த நவம்பரிலேயே செய்திருக்க வேண்டிய வாட் வரியைக் குறைத்து, அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று மாநில முதல்வா்களுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தி இருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பதிவில், கடந்த 8 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் மீதான மத்திய, மாநில அரசின் வரி விகிதங்களை பட்டியலிட்டுள்ளார். தற்போது தமிழக அரசு பெட்ரோல் மீது ரூ.22.54, டீசல் மீது ரூ.18.54 என மதிப்பு கூட்டு வரியை விகித்துள்ளதாகவும், இதுவே 2014 இல் வாட் வரியாக முறையே ரூ.15.67, ரூ.10.25 ஆக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு நவம்பரில் ஒரு லிட்டர் பெட்ரோல் மீதான மத்திய அரசு விகித்த ரூ.32.90 கலால் வரியில் இருந்து ரூ.5 குறைக்கப்பட்டது. தற்போது ரூ.27.90 ஆக வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இதேபோன்று டீசல் மீதான கலால் வரியில் ரூ.10 குறைக்கப்பட்டு தற்போது ரூ.21.80 ஆக பெறப்பட்டு வருகிறது. 

இதுவே கடந்த 2014 ஆம் ஆண்டு பெட்ரோல் மீது ரூ.9.48, டீசல் ரூ.3.37 மட்டும் கலால் வரியாக மத்திய அரசு வசூலித்து வந்தது. 

பெட்ரோலின் மொத்த விலையில் பெட்ரோல் மீதான வரி 43 சதவிகிதம், அதாவது பெட்ரோலின் அடிப்படை விலையில் 80 சதவிகிதம் வரி செலுத்துகிறோம்.

மேலும் மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு முன்பே, பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்து தமிழ்நாடு அரசு. அதனால் தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.3 குறைந்தது. 

நிதிநெருக்கடிக்கு மத்தியிலும், மக்கள் நலன் கருதி கடந்த ஆகஸ்ட் மாதம் வரி குறைக்கப்பட்டது.

இதனால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.1160 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசு விதிக்கும் கலால் வரி சுமார் 200 சதவிகிதமும், டீசல் மீதான கலால் வரி 500 சதவிகிதமும் உயர்த்தப்பட்டுள்ளது மத்திய அரசின் வரி விகிதத்தை பட்டியலிட்டுள்ள பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசு உயர்த்தியுள்ள வரி விகிதத்தை 2014 ஆம் ஆண்டில் இருந்ததுபோலவே குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com