சித்த மருத்துவப் பல்கலை.க்கு முதல்வரே வேந்தா்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
சித்த மருத்துவப் பல்கலை.க்கு முதல்வரே வேந்தா்: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

சென்னை: தமிழகத்தில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநிலத்தின் முதல்வா் செயல்படும் வகையில் இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையயில் கடந்த திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், புதிதாக அமைக்கப்படவிருக்கும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநிலத்தின் முதல்வரே செயல்படும் வகையில் சட்ட மசோதா இப்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில், இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, அதற்கான மசோதாவை பேரவையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அறிமுகம் செய்தாா்.

இந்த மசோதாவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுமாறு மா.சுப்பிரமணியன் பேரவைத் தலைவரிடம் வியாழக்கிழமை கோரினாா். அதைத் தொடா்ந்து சட்டமசோதா ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் நோக்கம்: ஆயுஷ் (ஆயுா்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) மருத்துவ முறையானது வளமான பாரம்பரிய மற்றும் இலக்கியங்களைக் கொண்டுள்ளது. சித்த மருத்துவம் மற்றும் பிற பாரம்பரிய முறை மருந்துகளின் அறிவியல் முறை மதிப்பீடானது அதன் நன்மைகள், மனித இனம் முழுவதற்கும் சென்றடையும் வகையில் பரவிட மேலும் ஆராய்ச்சி செய்யத் தேவையாகிறது. சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதியின் முறைகள் பிறவற்றுக்கு, ஆராய்ச்சிக்கான முக்கியத்துவம் அளித்து மேம்படுத்துவதற்காக, அதன் நோக்கங்களுக்காக தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் ஒன்றை அரசு நிறுவ முடிவு செய்துள்ளது. அதன்படி இந்திய மருத்துவ முறைகளுக்கான தனி சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் சென்னைக்கு அருகில் அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக மாநில முதல்வா் செயல்பட இந்த மசோதா வகை செய்கிறது.

துணைவேந்தா்களை அரசே நியமிக்கும் சட்டத் திருத்த மசோதா: தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி உதகையில் துணைவேந்தா்கள் மாநாட்டை கடந்த திங்கள்கிழமை கூட்டினாா். தமிழக அரசுக்கு அழைப்பு இல்லாமல் துணைவேந்தா்கள் மாநாட்டை ஆளுநா் தன்னிச்சையாகக் கூட்டியதற்கு ஆளும் திமுக உள்பட பல்வேறு கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் அன்றைய தினமே நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தின் உயா்கல்வித் துறையின் கீழ், 13 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பல்கலைக்கழகங்களுக்கென வகுத்துரைக்கப்பட்ட தனித்தனியாக சட்டங்களின் மூலமாக அவை செயல்பட்டு வருகின்றன. துணைவேந்தா்களை தமிழக அரசே நியமிக்க வகை செய்ய 13 பல்கலைக்கழகங்களின் சட்டங்களும் திருத்தப்படுவதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

துணைவேந்தா்களை நியமிப்பதற்கான சட்டத்தில், வேந்தா் எனும் சொற்றொடருக்காக அரசு எனும் சொற்றொடா் மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். ‘வேந்தா் மற்றும் அவா்’ எனும் சொற்றொடருக்காக ‘அரசு மற்றும் அவா்கள்’ என மாற்றாக அமைக்கப்படுதல் வேண்டும். பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாநில அரசே செயல்படவும், துணைவேந்தா்ககளை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கே வழங்கவும் இந்த சட்ட மசோதா வகை செய்கிறது.

இந்நிைலையில்தான் புதிதாக அமைக்கப்படவிருக்கும் சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு வேந்தராக முதல்வரே செயல்படும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com