மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் 

மாநிலங்களின் சட்ட உரிமைகளைப் பறித்துவிடுவதன் மூலமாக மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் 

மாநிலங்களின் சட்ட உரிமைகளைப் பறித்துவிடுவதன் மூலமாக மாநிலங்களை முடக்கிவிட சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல்லில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, நான் அறிவிப்பு செய்கிறேன் என்றால், அந்த அறிவிப்பைச் செயல்வடிவம் கொடுத்து நிச்சயமாக நிறைவேற்றிக் காட்டுவேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். ஏதோ அறிவித்துவிட்டு சென்று விடுவேன் என்று நினைக்காதீர்கள். அறிவித்த திட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பற்றி வாராவாரம் அது சம்பந்தப்பட்ட அமைச்சரிடத்தில், சம்பந்தப்பட்ட அதிகாரியிடத்தில், ஏன், இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கோட்டையில் என்னுடைய அறையிலேயே ஒரு போர்டு வைத்திருக்கிறேன். அதன் பெயர் டேஷ்போர்டு. அந்த டேஷ்போர்டு எதற்கு என்று கேட்டீர்கள் என்றால், என்னென்ன திட்டங்களை நாம் அறிவித்திருக்கிறோம், அந்தத் திட்டங்கள் எப்போது தொடங்கியிருக்கிறது, அது எந்தெந்த நிலையில் இருக்கிறது என்பது நான் கோட்டையிலே முதல்வர் அறையில் உட்கார்ந்துகொண்டே பார்க்கக்கூடிய அளவிற்கு ஒரு வசதியை செய்து வைத்திருக்கிறேன். 

எனவே, யாரும் அதிலிருந்து தப்பி விட முடியாது, அதில் நான் உஷாராக இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். அதை தினந்தோறும் நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன். எனவே, திண்டுக்கல் மாவட்டத்திற்க்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் - வேறு எந்த மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டமாக இருந்தாலும் - திட்டத்தை அறிவித்ததோடு நம் பணி முடிந்துவிட்டது என்று அமைதியாக இருந்துவிட மாட்டேன். திட்டத்தின் பயனை மக்கள் அடையக்கூடிய வகையில் அதை தொடர்ச்சியாக நான் கண்காணித்துக் கொண்டு இருப்பேன் என்பதை மீண்டும் மீண்டும் உறுதியோடு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஒரு கட்சியினுடைய ஆட்சி முடிந்து, இன்னொரு கட்சியினுடைய ஆட்சி வந்திருக்கிறது என்று இல்லாமல், ஒரு மிகப் பெரிய மாற்றத்திற்கான அடித்தளத்தை நாங்கள், தமிழ்நாட்டில் அமைத்துக் கொண்டு வருகிறோம். சமூகத்தில் சமூகநீதியை உருவாக்குவதிலும் - பொருளாதாரத்தில் எல்லார்க்கும் எல்லாம் என்பதைக் கிடைக்க வைப்பதிலும் - மாணவர்கள், இளைஞர்கள் உயர்கல்வியை அடைவதிலும் - தகுதிக்கு ஏற்ற வேலையைப் பெறுவதிலும் – சமூகத்தின் அனைத்து தடைகளை எல்லாம் தாண்டி, பெண்களைச் முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய - தொழில் வளர்ச்சியானது இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலகத்தரத்துடன் போட்டி போடக் கூடியதாக, உலகத்தின் தலைசிறந்த நிறுவனங்களையும் ஈர்க்கத்தக்க வகையில் தமிழ்நாடு எழுச்சி பெறுவதும்தான் இந்த ஆட்சியின் நோக்கம்.

ஆட்சியினுடைய நோக்கம் என்று சொன்னால், இப்போது தொடர்ந்து நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம், இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடைபோடுகிறது என்பதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்று சொன்னால் - இதுதான் நான் காண விரும்பும் கனவு தேசம். தமிழ்நாட்டைத் தலைநிமிர வைக்கத்தான் ஒவ்வொரு நாளும் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டை வழிநடத்தி - தமிழ்நாட்டின் உயர்வுக்குக் காரணமான சமூகநீதி - மாநில சுயாட்சி - கூட்டாட்சித் தத்துவம் - சமத்துவம் - சகோதரத்துவம் ஆகிய அனைத்தும் இந்தியா முழுமைக்கும் பரவ வேண்டும் என்று நான் நினைக்கக்கூடியவன்.

இத்தகைய உன்னதமான சிந்தனையானது தனிப்பட்ட என்னால் அல்ல, தனிப்பட்ட ஸ்டாலினால் அல்ல, தனிப்பட்ட ஒரு முதலமைச்சரால் அல்ல,
இதையெல்லாம் முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னால், இதற்கு அமைச்சர் பெருமக்கள், நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைகளைச் சார்ந்திருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவருக்கும், அதேபோல மாவட்டங்களை வழிநடத்திக் கொண்டிருக்கக்கூடிய அதிகாரிகள் அனைவருக்கும், அந்தப் பொறுப்புணர்வு இருந்து, நீங்கள் கை கோற்க வேண்டும் என்று இந்த இலக்கை வைத்து நான் மட்டும் நினைத்தால் அதில் வெற்றி பெற்றுவிட முடியாது. இந்த இலக்கு என்பது அதிகாரத்தை கொண்டு செலுத்தக்கூடிய நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கும் வந்துவிடுமானால் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. அந்த இலக்கோடு அனைவரும் பணியாற்றிட வேண்டுமென்ற அந்த வேண்டுகோளை இந்த நேரத்தில் நான் எடுத்துவைக்க விரும்புகிறேன்.

மாநிலங்களின் அரசியல் உரிமைகளை - மாநிலங்களின் நிதி உரிமைகளை - மாநிலங்களின் சட்ட உரிமைகளைப் பறித்துவிடுவதன் மூலமாக மாநிலங்களை
முடக்கிவிட சிலர் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது மாநிலங்களை முடக்குவதாக நினைத்து, மக்களை முடக்க நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்வதுதான் மாநிலங்களுடைய உரிமை. அதை மாநிலங்கள்தான் செய்தாக வேண்டும். மிகக் கடுமையான நிதி நெருக்கடி இருந்தாலும், இத்தனை திட்டங்களைத் தீட்டுகிறோம் என்றால் - எல்லாம் யாருக்கு, உங்களுக்கு. எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மக்களுக்குத்தான். ஆக, மக்களுக்காக இருப்பவர்கள் நாங்கள். மக்களோடு இருப்பவர் நாங்கள். மக்களுக்காகவே வாழ்பவர்கள் நாங்கள். 

எனவே, நாங்கள் எல்லாம் மக்களுடைய தொண்டர்கள். உங்களால் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நான் ஒரு தலைமைத் தொண்டனாக இருந்து - உங்கள் தேவைகள் அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக செய்து தருவேன். ஐ.பெரியசாமி குறிப்பிட்டத்தைப் போல 70 சதவீதம், 80 சதவீதம் பணிகள் தேர்தல் நேரத்தில் அளித்திருக்கக்கூடிய உறுதிமொழிகள் எல்லாம் நிறைவேற்றியிருக்கிறோம். மீதமுள்ள இருக்கக்கூடிய அந்த உறுதிமொழிகளையும் மிக விரைவிலே, படிப்படியாக, நிதிநிலை சூழ்நிலைக்கேற்ப அனைத்தையும் நிறைவேற்றித் தருவோம் என்ற அந்த உறுதியை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, எல்லார்க்கும் எல்லாம் என்ற திராவிடக் கொள்கை தமிழ்நாட்டில் நிலைக்க நித்தமும் பாடுபடுவோம் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com