
கன மழை மற்றும் பலத்த காற்று காரணமாக சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது விழுந்து கிடக்கும் மரங்கள்.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக தமிழகத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலிருந்து கேரளம் மாநிலத்திற்கு இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்களாக அதி கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள சூழலில், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ந்து 3 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு முதல் மழையுடன் பலத்த காற்றும் வீசி வருகிறது. காற்றின் காரணமாக தொடர்ந்து மரங்கள் வேரோடு சாய்வதால் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்து கிடப்பதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை நிறுத்தம்: எம்எல்ஏ கண்டனம்
தொடர் மழை காரணமாக உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. பலத்த மழை காரணமாக தமிழகத்தின் கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளிலிருந்து கேரளம் மாநிலத்திற்கு இரவு நேர போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிகளவாக அவலாஞ்சி யில் 200 மி. மீ மழை பதிவாகியுள்ளது. அதேபோல தேவாலாவில் 181 மி. மீ, நடு வட்டத்தில் 152 மி. மீ, மேல் பவானி 140 மி. மீ, பந்தலூர் 110 மி. மீ, சேரம்பாடி 81 மி. மீ, கூடலூர் 75 மி. மீ, உதகை 74.5 மி மீ, கிளன்மார்கன் 73 மி மீ, ஓவேலி 73 மி. மீ மழையும் பதிவாகியுள்ளது.