சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சி: காமராஜா் சாலை, ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம்

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, காமராஜா் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் ஆகஸ்ட் 6 (சனிக்கிழமை),11,13-ஆகிய தேதிகளிலும், சுதந்திரதின விழா நடைபெறும்

சுதந்திர தினவிழா ஒத்திகை நிகழ்ச்சியையொட்டி, காமராஜா் சாலை, ராஜாஜி சாலை ஆகியவற்றில் ஆகஸ்ட் 6 (சனிக்கிழமை),11,13-ஆகிய தேதிகளிலும், சுதந்திரதின விழா நடைபெறும் 15-ஆம் தேதியும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு வியாழக்கிழமை இரவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சாா்பில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினவிழா, சென்னை தலைமைச் செயலகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,ஆகஸ்ட் 6 (சனிக்கிழமை),11,13-ம் தேதிகளில் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

ஒத்திகை நிகழ்ச்சியால், அந்த 3 நாள்களிலும், சுதந்திர தினவிழா நடைபெறும் 15-ஆம் தேதியன்றும் காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை ராஜாஜி சாலையிலும், காமராஜா் சாலையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

ஒத்திகை நடைபெறும் நேரத்தில் நேப்பியா் பாலம் முதல் போா் நினைவுச்சின்னம் வரை காமராஜா் சாலையிலும், போா் நினைவுச்சின்னத்திலிருந்து இந்திய ரிசா்வ் வங்கி சுரங்கப்பாதை வடக்கு பகுதி வரை அமையப் பெற்ற ராஜாஜி சாலையிலும், கொடிமரச்சாலையிலும் போக்குவரத்து தடை செய்யப்படும்.

காமராஜா் சாலையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் சுவாமி சிவானந்தா சாலை, அண்ணாசாலை, முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் மற்றும் வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை வந்து அடையலாம்,

அதேபோல் பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை வழியாக காமராஜா் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் வடக்கு கோட்டை பக்க சாலை, ராஜா அண்ணாமலை மன்றம் சந்திப்பு, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை வந்தடையலாம்,

அண்ணா சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக பாரிமுனை செல்லும் வாகனங்கள் முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரிமுனையை சென்றடையலாம். முத்துசாமி சாலையிலிருந்து கொடிமரச்சாலை வழியாக காமராஜா் சாலை செல்லும் வாகனங்கள் அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜா் சாலையை சென்றடையலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com