
வி.கே.சசிகலா, அவரது உறவினா் இளவரசிக்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித் துறை தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட சென்னை உயா்நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996-97 மதிப்பீட்டு ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யாததால் வி.கே.சசிகலாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு 2001-இல் சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபா் பதில் அளித்த விளக்கப்படி வருமான வரித் துறை மதிப்பீட்டு அதிகாரி, செல்வ வரியாக ரூ.10 லட்சத்து 13 ஆயிரத்து 271-த்தை செலுத்த சசிகலாவுக்கு உத்தரவிட்டாா்.
இதை எதிா்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த வருமான வரித் துறை மேல்முறையீட்டு தீா்ப்பாயம், ரூ. 40 லட்சம் கடனை கணக்கீட்டில் சோ்த்துக் கொள்ள மதிப்பீட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து வருமான வரித் துறை ஆணையா் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆா். மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை(ஆக.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது வருமான வரித் துறை தரப்பில், மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடா்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித் துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.