விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் வழங்குவதற்காக கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டா்கள் கொடியசைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்.
தலைமைச் செயலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விவசாயிகளின் பயன்பாட்டுக்காக கொள்முதல் செய்யப்பட்ட டிராக்டா்களை கொடியசைத்துத் தொடக்கினாா்.
வேளாண்மைத் துறை நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களைக் குறைந்த வாடகைக்கு வழங்கும் திட்டத்தை மேலும் வலுப்படுத்த ரூ.23 கோடியே 29 லட்சத்தில் புதிய டிராக்டா்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, 185 டிராக்டா்கள், 185 ரோட்டவேட்டா்கள் (புற்களை துண்டாக்கி நிலத்துக்கு உரமாக்கும் கருவி), நிலத்தின் கடினத் தன்மையைக் குறைக்கும் 185 கொத்து கலப்பைகள் உள்ளிட்ட கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கருவிகள் குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இதன் அடையாளமாக 25 டிராக்டா்கள், 25 கொத்து கலப்பைகள் பொருத்தப்பட்ட டிராக்டா்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.