3,000 ஏக்கர் விளை நிலங்கள்; 1,000 குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகும்!

பரந்தூரில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையத்தால் 3,000 ஏக்கர் விளை நிலங்களும், 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
3,000 ஏக்கர் விளை நிலங்கள்; 1,000 குடியிருப்புகள் பாதிப்புக்குள்ளாகும்!

காஞ்சிபுரம்: சென்னையின் 2-ஆவது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமையவிருக்கும் பசுமை விமான நிலையத்தால் 3,000 ஏக்கர் விளை நிலங்களும், 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாலும், தற்போதுள்ள விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதாலும் 2-ஆவது விமான நிலையத்தை அமைப்பது காலத்தின் கட்டாயமாகிறது. 

எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சென்னைக்கு அருகேயுள்ள இடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த போது, பரந்தூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான அனைத்து சாத்தியக் கூறுகளும் இருந்தன.

புதிய விமான நிலையமானது 4,971 ஏக்கரில் சுமார் 10 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய திறன் உடையதாகவும் அமையவுள்ளது. இந்த விமான நிலையம் அமைந்தால், தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 

அதே நேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 3,000 ஏக்கர் விளை நிலங்களையும், 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளையும் அழிக்க வேண்டிய சூழல் உருவாகும் என விவசாயிகள் சங்கத் தலைவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கேநேரு கூறியது:

புதிய விமான நிலையம் அமைப்பதை வரவேற்கிறோம். அதே நேரம், காஞ்சிபுரம் ஒன்றியத்தில் வளத்தூர், நெல்வாய்,  பரந்தூர், தண்டலம், பொடவூர், மடப்புரம் கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் இடையார்பாக்கம், ஏகனாபுரம், குணகரம்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், சிங்கில்பாடி உள்ளிட்ட கிராமங்களில் மொத்தம் 3,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும், இந்தக் கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அப்புறப்படுத்தும் நிலை ஏற்படும்.

கடந்த 2013-ஆம் ஆண்டு நில எடுப்பு மசோதா சட்டத்தின்படி, விவசாயிகளிடமிருந்து நிலங்களை கையகப்படுத்தும்போது, அவர்களின் அனுமதியின்றி நிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிராமக் கூட்டம் நடத்தி, அதில் 80 சதவீத பொதுமக்கள் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர்களது விளை நிலங்களை அரசு கையகப்படுத்த முடியும். அப்படியே கையகப்படுத்தினாலும் சந்தை மதிப்பைவிட 3 மடங்கு அதிகமாக நஷ்டஈடு தரப்பட வேண்டும்.

1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றும் சூழ்நிலை ஏற்படுவதால், அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து, தற்போதுள்ள வீட்டைக் காலி செய்யும் வரை அவர்களை அப்புறப்படுத்தக் கூடாது. 

பரந்தூரில் உள்ள பம்பக் கால்வாயிலிருந்து 72 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதால், அந்தக் கால்வாயை மூடக்கூடாது. பசுமை விமான நிலையம் அமைக்கிறோம் என்ற பெயரில் ஏரிகளும், குளங்களும் அதிகமுள்ள இந்தப் பகுதிகளை அழித்துவிடக் கூடாது என்றார் அவர்.

வாலாஜாபாத் ஒன்றிய முன்னாள் தலைவர் சங்கர் கூறியது:

பரந்தூர் ஊராட்சியில் ஏகனாபுரம் முழுமையாக அழிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டு பகுதியளவும், தண்டலம் ஊராட்சியில் நெல்வாய் கிராமத்தின் ஒரு பகுதி குடியிருப்புகளும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், வளத்தூர், இடையர்பாக்கம், மகாதேவி மங்கலம், அக்கம்மாபுரம், குணகரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் உள்ள விளை நிலங்கள்  அழியும் அபாயம் உள்ளது. மொத்தத்தில் விமான நிலையம் அமையப்போகும் செய்தியறிந்து மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

பரந்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே.பலராமன் கூறியது:

இந்தப் பகுதி மக்கள் விவசாயத்தை நம்பித்தான் வாழ்கின்றனர். விவசாயம்தான் பிரதான தொழில். ஏராளமான இளைஞர்கள் படித்துக் கொண்டே விவசாயம் செய்து வருகின்றனர். 

அவர்களது படிப்பும், விவசாயமும் பாழாகிவிடும். ஊரை விட்டு துரத்தி விடுவார்களோ என்ற அச்சம் பல கிராமத்து மக்களுக்கு வந்துவிட்டது. மக்களைப் பாதிக்காத வகையில், விமான நிலையம் அமைக்க வேண்டும். எங்களைப் பொருத்தவரை இது மகிழ்ச்சியான செய்தியல்ல; அதிர்ச்சியான செய்தி என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com