பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

பவானிசாகா் அணையில் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக இருப்பதால் முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. 
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி.
பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்து வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு:  பவானிசாகர் அணையில் இருந்து அடுத்த 120 நாள்களுக்கு 1.035 லட்சம் ஏக்கர் நிலத்திற்கு பாசனம் செய்ய வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை கீழ்பவானி பிரதான கால்வாயில் வெள்ளிக்கிழமை காலை தண்ணீரை திறந்து விட்டனர் 

பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: 

கீழ்பவானி பிரதான கால்வாயில் திறந்து விட்ட தண்ணீர் மலர் தூவி வரவேற்கும் அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

பவானிசாகா் அணையில் வழக்கமாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும். தற்போது அணையின் நீா்மட்டம் 102 அடியாக இருப்பதால் முன்கூட்டியே அணையில் இருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. 

எனவே நடப்பாண்டு தண்ணீர் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை. ஏற்கனவே, பவானிசாகர் அணை நிரம்பி வழிவதால் கால்வாயில் இரு நாள்களுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. எனினும் அதிகாரப்பூர்வமாக வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முதலில் 500 கனஅடி தண்ணீரும், பிறகு அது படிப்படியாக 2,300 கன அடி வரை அதிகரிக்கப்படும். 

முதல் போக நன் செய் பாசனத்துக்கு வெள்ளிக்கிழமை முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு, திருப்பூா், கரூா் மாவட்டங்களிலுள்ள ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

கீழ்பவானி பிரதான கால்வாயில் திறந்து விட்ட தண்ணீர்

கடந்தாண்டு பிரதான கால்வாயில் சில இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. தற்பொழுது முன்னேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, உடைப்பு ஏற்பட வாய்ப்பில்லை. விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் கையிருப்பில் உள்ளன. புதிதாக பாரம்பரிய ரகமான தூயமல்லி என்ற நெல் விதையை மூன்று டன் விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். 

தேர்தல் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். அத்திக்கடவு அவினாசி திட்டம் காலதாமதமாக அரசுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. தண்ணீர் கொண்டு செல்லும் பைப்புகள் போடப்படுவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்படுகிறது. தாளவாடி மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் கர்நாடக மாநிலத்துக்கு செல்கிறது. இதை தாளவாடி பகுதியில் பயன்படுத்த ஆய்வு நடத்தப்படும். 

பவானிசாகர் அணையில் இருந்து பாசனம் செய்ய தண்ணீரை வைத்த வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள்.

அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியா் கிருஷ்ணனுண்ணி, பொதுப்பணித்துறை அதிகாரிகள்

தெங்குமரஹடா பகுதியில் உள்ள குடும்பங்களை வேறு இடத்திற்கு மாற்ற ஈரோடு கோயம்புத்தூர் நீலகிரி ஆட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அந்த ஆய்வும் பரிசீலனையில் உள்ளது. கேரளம் மாநிலம் பாண்டியாறு புன்னம்புழா நதி நீரை மோயாறு சேர்ப்பது குறித்த ஆய்வும்  நடைபெற்று வருகிறது. கீழ்பவானி பாசன கால்வாயை நவீனப்படுத்த அரசு திட்டமிட்டது. விவசாயிகள் இரு பிரிவாகப் பிரிந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் காட்டுகின்றனர். இது சம்பந்தமாக நீதிமன்றங்களை அணுகி உள்ளனர். அரசைப் பொறுத்தவரை இரு பிரிவினரும் அமர்ந்து பேசி இப்பிரச்னையில் ஒரு சுமுகமான தீர்வு காணவேண்டும்.  

தாளவாடி மலைப்பகுதியில் வனவிலங்குகள் பாதிக்காமல் இருக்க இரவு நேர வாகன போக்குவரத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனினும். உள்ளூர் மக்கள் இரவில் தாளவாடி வழியாக செல்ல பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும். பவானிசாகர் அணை உபரி நீரை அருகில் உள்ள குளம் குட்டைகளில் நிரப்ப ஆய்வு மேற்கொள்ளப்படும். சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைதரம் உயர்த்தப்பட்டு அனைத்து வசதிகளும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டு வசதி வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் அரசு தேர்வாணையம் மூலம் நிரப்பப்படும். தற்காலிக ஊழியர்கள் சம்பந்தமாக சிஎம்டிஏ நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் முத்துசாமி கூறினார். 

பேட்டியின்போது ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com