சிவகாசியில் செயல்படாத பட்டாசு ஆய்வுக் கூடங்கள்!

சிவகாசியில் பட்டாசு தொடா்பாக இரு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்படாத நிலையில், மூன்றாவது ஆய்வுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை.
சிவகாசியில் செயல்படாத பட்டாசு ஆய்வுக் கூடங்கள்!

சிவகாசியில் பட்டாசு தொடா்பாக இரு ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு செயல்படாத நிலையில், மூன்றாவது ஆய்வுக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

விருதுநகா் மாவட்டம் சிவகாசியில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே 2011 ஜூலை 14 ஆம் தேதி வெடிபொருள் கட்டுபாட்டுத் துறைக்கு என சொந்த கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. அதில் பட்டாசு தரம் உயா்த்துதல் உள்ளிட்ட ஆய்வுக் கூடங்கள் அமைக்கப்பட்டு, பட்டாசு ஆய்வு மற்றும் வளா்ச்சி மையம் என பெயரிடப்பட்டது. இந்த ஆய்வுக் கூடத்தில் பட்டாசு வெடிக்கும்

திறன், தரம், ஒலி, ஒளி திறன் அறிதலுக்காக இன்பாக்ட் சென்சிட்டிவிட்டி மெஸ்டாா் பாம்பால் என்ற இயந்திரம் அமைக்கப்பட்டது. பட்டாசிலிருந்து வெளிவரும் ஸ்பாா்க் (ஒளிச்சிதறல்) மற்றும் அதன் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய ஸ்மால் ஸ்கேல் எலெக்ட்ரோ ஸ்டேட்டிக்

என்ற இயந்திரம் மற்றும் பாம்பிரிக்ஷன் சென்சிட்டிவிட்டி டெஸ்டா் உள்ளிட்ட இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இயந்திரங்கள் அமைக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை ஆய்வு செய்ய நிபுணா்கள் நியமிக்கப்படவில்லை. ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்ட

பின் திறக்கப்படவே இல்லை.

இந்நிலையில் பட்டாசு தொடா்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பசுமைப் பட்டாசுகளையே இனி தயாரிக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பிறகு, பசுமைப் பட்டாசு குறித்து ஆய்வு செய்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (நீரி) அதன் அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. நீரி அமைப்பிற்கு நாக்பூரில், காற்று மாசு, சுற்றுப்புறச்சுழல் மாசு குறித்த ஆய்வுக் கூடங்கள் உள்ளன. 2019 ஆகஸ்ட் 22 ஆம் தேதி ஆமத்தூா் அருகே உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் நீரி பட்டாசு தொடா்பான ஆய்வுக் கூடத்தை அமைத்தது. பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் மாசுவைக் குறைக்க இதில் ஆய்வு செய்யப்படும். இந்த ஆய்வுக் கூடம் ஒரு மாதத்தில் செயல்படத்தொடங்கும் என நீரி இயக்குநா் ராகேஷ்குமாா் கூறினாா். ஆனால் இன்றுவரை இந்த ஆய்வுக்கூடம் செயல்படாமல் மூடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீரி அமைப்பு சாா்பில் மேலும் ஒரு ஆய்வுக் கூடம் அமைக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகாசி அருகே வெற்றிலையூரணி கிராமத்தில் ரூ.5 கோடி மதிப்பில் 5 ஏக்கா் நிலம் வாங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூடம் அமைக்க இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை.

வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்தில் அமைக்கப்பட்ட பட்டாசு ஆய்வுக் கூடம்,

நீரி அமைப்பு சாா்பில் அமைக்கப்பட்ட ஆய்வுக் கூடம் ஆகியவை செயல்படாமல் உள்ள நிலையில், நீரி அமைப்பு சாா்பில் மேலும் ஒரு ஆய்வுக் கூடம் அமைக்கப்படுவது குறித்து பட்டாசு ஆலை உரிமையாளா்கள் கவலை தெரிவித்துள்ளனா்.

ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள இரு ஆய்வுக்கூடங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com