
தன்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கோவை மாவட்டம், ஈச்சனாரியில் ரூ.589 கோடி மதிப்பில் 1.07 லட்சம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கல், புதிய திட்டப் பணிகள் தொடக்கம், முடிவுற்ற பணிகளைப் பொது மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவைக்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஏதோ சிலருக்கு உதவிகளைச் செய்துவிட்டு கணக்கு காட்டுபவர்கள் அல்ல நாங்கள். கணக்கில்லாத உதவிகளை, கணக்கிட முடியாத நலத்திட்ட உதவிகளை அளிக்கும் அரசு திமுக அரசு.
தமிழகத்தைப் பின்பற்றும் மாநில அரசுகள்: தமிழகத்தின் முற்போக்குத் திட்டங்களைக் கவனித்து பல்வேறு மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இதை இங்கே இருக்கும் சிலரால் தாங்கிக் கொள்ள முடியாமல் பொத்தாம்பொதுவாக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறுகின்றனர். மக்களிடம் கேட்டுப் பாருங்கள்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறப்பட்டன. ஆட்சி பொறுப்பேற்றதும் இதற்காக தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டு வருகிறது.
கட்டணமில்லா பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்த பயனாளிகள், இலவச மின்சார விவசாயிகள், அரசு ஊழியர்கள் அனைவரும் திமுக அரசை வாழ்த்தி வருகின்றனர்.
அனைத்து மக்களுக்குமான அரசு: ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட உள்ளிட்ட அனைத்து மக்களுக்குமான அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. பெரும்பான்மை, சிறுபான்மை சமூகத்துக்கிடையேயான ஒற்றுமை சிதைந்துவிடாத சகோதரத்துவ ஆட்சியை அளித்து வருகிறது.
ஒரு தாய் தனது எல்லா குழந்தைகளையும் சமமாக பாவிப்பதைப் போன்றுதான் கொளத்தூர் தொகுதியைப்போல அனைத்து தொகுதிகளையும் கண்காணித்து வருகிறேன். அதன்படி "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டம் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் நீண்ட காலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய பிரச்னைகள் குறித்து ஆட்சியரிடம் பரிந்துரை செய்ய சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடித் திட்டம் இது.
தனிப்பட்ட முறையில் என்னை விமர்சிப்பது பற்றி கவலைப்படவில்லை. ஆனால், என்னை எதிர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு குந்தகம் விளைவிக்க நினைத்தால் அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். சொந்தக் கட்சிக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியை மறைப்பதற்காக திசைதிருப்பும் நோக்கத்தோடு திமுக அரசை விமர்சிக்கின்றனர்.
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவதே லட்சியம் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில் புதன்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுக் கட்சியினர் 55 ஆயிரம் பேர் திமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
இந்த விழாவில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன், பாஜக மாநில மகளிரணிச் செயலர் மைதிலி, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அபிநயா, மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலர் வினோத்குமார் ஆகியோர் திமுகவில் இணைந்தனர்.