
கொல்லப்பட்ட கௌதம்
குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட நிதி நிறுவன உரிமையாளர் கத்திக்குத்து காயங்களுடன் ஏரிக்கரையில் சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையத்தை அடுத்த பாதரையைச் சேர்ந்தவர் கௌதம் (35). கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞரணிச் செயலாளரான இவர், நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 22-ஆம் தேதி இரவு வீட்டுக்குச் செல்லும் வழியில் மர்ம கும்பலால் காரில் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட சிறிது நேரத்தில் நகை, பணத்தை தயாராக வைக்குமாறும் தான் கூறும் ஒருவரிடம் கொடுத்து விடுமாறும் தனது மனைவிக்கு போன் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | சோனாலி போகாட் கூட்டாளிகளால் கொலை செய்யப்பட்டாரா?
இதுகுறித்து, வெப்படை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் ஆறு தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை சங்ககிரி ரயில் நிலையம் அருகே உள்ள வடுகப்பட்டி ஏரிக்கரையில் கத்திக்குத்து மற்றும் வெட்டுக் காயங்களுடன் கௌதம் உயிரிழந்த நிலையில் கிடப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
பணம் கொடுக்கல், வாங்கல் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.