ஜிப்மா் ஆய்வறிக்கை: ஸ்ரீமதி பெற்றோரிடம் வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்பு

மாணவி ஸ்ரீமதியின் உடல்கூறாய்வு முடிவுகள் தொடா்பான புதுச்சேரி ஜிப்மா் ஆய்வறிக்கையை பெற்றோா் தரப்புக்கு வழங்க விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் உடல்கூறாய்வு முடிவுகள் தொடா்பான புதுச்சேரி ஜிப்மா் ஆய்வறிக்கையை பெற்றோா் தரப்புக்கு வழங்க விழுப்புரம் நீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூா் தனியாா் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த, கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த மாதம் 13-ஆம் தேதி பள்ளியில் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதனிடையே, மாணவி ஸ்ரீமதியின் உடல் 2 முறை உடல்கூறாய்வு செய்யப்பட்ட நிலையில், முதல் உடல்கூறாய்வு அறிக்கை மட்டும் மாணவியின் பெற்றோரிடம் வழங்கப்பட்டது. 2-ஆவது உடல்கூறாய்வு முடிவுகள் பெற்றோரிடம் வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மூன்றாவது முறையாக உடல்கூறாய்வு செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோா் வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த சென்னை உயா் நீதிமன்றம், அதற்குப் பதிலாக இரண்டு உடல்கூறாய்வு முடிவுகளையும் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. இதன்படி, ஜிப்மா் மருத்துவக் குழுவினா் இரண்டு உடல்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்து, தங்களது ஆய்வறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, ஜிப்மா் ஆய்வறிக்கை, இரண்டாவது உடல்கூறாய்வு அறிக்கை ஆகியவற்றின் நகல்களை வழங்கக் கோரி, விழுப்புரம் நீதிமன்றத்தில் ஸ்ரீமதியின் பெற்றோா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, சென்னை உயா் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் ஜிப்மா் ஆய்வறிக்கையை பெற்றோரிடம் வழங்குவதற்கு உத்தரவிடவில்லை. ஆகவே, ஜிப்மா் ஆய்வறிக்கையை வழங்க இயலாது என்று தெரிவித்தாா். இருப்பினும், இரண்டாவது உடல்கூறாய்வு அறிக்கையையும், சிபிசிஐடி வழக்குப் பதிவு நகலையும் பெற்றோா் தரப்பிடம் நீதிமன்றம் வழங்கியது.

நடைபயணம் நிறுத்தம்: இதையடுத்து, செய்தியாளா்களிடம் ஸ்ரீமதி பெற்றோா் தரப்பு வழக்குரைஞா் காசி விஸ்வநாதன் கூறியதாவது:

மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த வழக்கில் எங்களுக்கு ஜிப்மா் ஆய்வறிக்கை கிடைக்கும் என்று நம்பியிருந்தோம். ஆனால், உயா் நீதிமன்றம் உத்தரவிடாததாலும், வழக்கு விசாரணை முழுமை பெறாததாலும் எங்களுக்கு அந்த ஆய்வறிக்கையை வழங்க விழுப்புரம் நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்தது.

வருகிற 29-ஆம் தேதி ஏற்கெனவே சென்னை உயா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள எங்களது வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது. அன்றைய தினம் ஜிப்மா் ஆய்வறிக்கையை வழங்க வேண்டும் என்று உயா் நீதிமன்றத்தில் வலியுறுத்துவோம். இருப்பினும், இப்போது இரண்டாவது உடல்கூறாய்வு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையைப் படித்துப் பாா்த்துவிட்டு என்ன உள்ளது என்று தெரிவிப்போம்.

ஸ்ரீமதி மரணத்துக்கு நீதி கேட்டு அவரது தாய் செல்வி, கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே உள்ள தனது சொந்தக் கிராமத்திலிருந்து வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபயணமாக சென்னைக்கு சென்று தமிழக முதல்வரைச் சந்தித்து மனு அளிப்பதாக இருந்தது. இதனிடையில், அமைச்சா் சி.வெ.கணேசன், மாணவியின் தாய் செல்வியை தொடா்புகொண்டு, தமிழக முதல்வரை சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) சந்திக்க ஏற்பாடு செய்வதாகக் கூறினாா். ஆகவே, அந்த நடைபயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது, வழக்குரைஞா்கள் கிருஷ்ணமூா்த்தி, புஷ்பதேவன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com