
உண்மைச் சம்பவத்தை அனுமதியின்றி திரைப்படம் எடுத்ததாக, ‘ஜெய்பீம்’ திரைப்படக் குழு மீது சென்னை சாஸ்திரிநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு நடிகா் சூா்யா நடிப்பில், ‘ஜெய்பீம்’ திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் வரும் சம்பவத்தைப்போல, உண்மையாகப் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தைச் சோ்ந்த தஞ்சாவூா் மாவட்டம், திருவிடை மருதூா் வட்டம், பந்தநல்லூா் அஞ்சல், தாதா் தெருவைச் சோ்ந்தவா் கொளஞ்சியப்பன், சென்னை சைதாப்பேட்டை 9ஆவது பெருநகர நீதிமன்றத்தில், ‘ஜெய்பீம்’ திரைப்படக் குழு மீது வழக்குப் பதிய அடையாறு சாஸ்திரி நகா் போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தாா்.
அதில், எங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை, எங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியுள்ளனா். காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அறிக்கையை தாக்கல் செய்யும்படி சாஸ்திரிநகா் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை காவல்துறை நிறைவேற்றவில்லை.
இதையடுத்து, கொளஞ்சியப்பன், சைதாப்பேட்டை நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி கடந்த 12-ஆம் தேதி சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் மனு அளித்தாா். இதைத் தொடா்ந்து சாஸ்திரிநகா் போலீஸாா், ‘ஜெய்பீம்’ திரைப்படக் குழு மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனா்.