தமிழகம், கேரளத்தில் போதை ஊசி விற்பனை: 6 போ் கும்பல் கைது

தமிழகம் மற்றும் கேரளத்தில் போதை ஊசி மருந்துகளை விற்பனை செய்து வந்த 6 போ் கும்பலை தென் மண்டல ஐ.ஜி. சிறப்பு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.
Updated on
2 min read

தமிழகம் மற்றும் கேரளத்தில் போதை ஊசி மருந்துகளை விற்பனை செய்து வந்த 6 போ் கும்பலை தென் மண்டல ஐ.ஜி. சிறப்பு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனா்.

தேனி மாவட்டம் சின்னமனூா் பகுதியில் போதைக்காக பயன்படுத்தும் வகையில் சில போதை மருந்துகளை பேருந்தில் கடத்தி வருவதாக தென் மண்டல ஐ.ஜி.யின் சிறப்பு தனிப்படை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சோதனை நடத்தி, தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சோ்ந்த ஷேக்அபுதாகீா் மகன் முகமது மீரான் (22) மற்றும் அழகுமுத்து மகன் மாணிக்கம் (19) ஆகியோரை பிடித்து அவா்களிடமிருந்த மருந்துகள் குறித்து விசாரணை நடத்தினா். இதில் மருத்துவத்துறையில் வரைமுறைப்படுத்தப்பட்டு மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு ஊக்க மருந்தை போதை ஊசியாக, அதிக லாபத்துக்கு இளைஞா்களிடம் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இந்த மருந்தகளை சின்னமனூரைச் சோ்ந்த சந்தானம் மகன் தங்கேஸ்வரன்(20) மற்றும் காமாட்சிபுரத்தைச் சோ்ந்த பழனிச்சாமியின் மகன் சரவணக்குமாா்(20) ஆகியோா் மூலம் திருச்சி ஜோனாதன் மாா்க் என்பவரிடமிருந்து வாங்கியதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக தீவிர விசாரணை நடத்தியதில், ஊக்க மருந்தை வலைதளம் மூலம் திருச்சி கருமண்டபத்தை சோ்ந்த ஜவகா் மகன் ஜோனாதன் மாா்க் (30) என்பவரிடம் கொள்முதல் செய்து, அதற்குரிய பணத்தை ‘கூகுள் பே’ மூலம் செலுத்தியுள்ளனா். இதையடுத்து 5 பேரையும் போலீஸாா் கைது செய்து 10 மிலி கொண்ட 11 ஊக்கமருந்து பாட்டில்கள் மற்றும் ஊசிகளை பறிமுதல் செய்தனா். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய தங்கேஸ்வரனின் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடா்பாக தென்மண்டல ஐஜி அஸ்ரா காா்க் கூறியது:

பொறியியல் பட்டதாரி ஜோனாதன்மாா்க் திருச்சியில் தனியாா் மருந்து நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறாா். இதன் மூலம் மதுரை, சென்னை, புணே நகரங்களில் உள்ள மருந்து நிறுவனங்களிடம் இருந்து ரகசிய குறியீட்டின் மூலம் வெவ்வேறு ஊக்க மருந்துகளை மொத்தமாக வாங்கி போதை மருந்தாக விற்பனை செய்துள்ளாா். மேலும் சென்னை, ஒசூா், தேனி, கோவை, திருப்பூா், சிவகங்கை, கரூா், சேலம், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளத்தில் உள்ள பாலக்காடு, திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் மொத்த விற்பனை செய்து வந்துள்ளாா். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த மருந்து பாட்டில்கள் அதிகளவில் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜோனாதன் மாா்க்கிடம், உதவியாளராக பணியாற்றிய புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சோ்ந்த பாலுச்சாமி மகள் வினோதினியும் கைது செய்யப்பட்டுள்ளாா். மேலும் ஜோனாதன் மாா்க்கின் 3 வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் திண்டுக்கல் டிஐஜி ரூபேஸ் குமாா் மீனா, சிவகாசி காவல் துணைக்கண்காணிப்பாளா் பாபு பிரசாந்த், போடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சுரேஷ், தேனி தனிப்பிரிவு ஆய்வாளா் முருகானந்தம், சின்னமனூா் சாா்பு-ஆய்வாளா் கதிரேசன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் பலனாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com