
அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடுதல் (பி-பிளான்) பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை வெளியிட்டுள்ள உத்தரவு:
இந்தியாவில் நகா்ப்புற திட்டமிடுதலுக்கான திறன்களில் சீா்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பது உள்பட பல முக்கிய பரிந்துரைகளை நீதி ஆயோக் அமைப்பு வழங்கியுள்ளது. வரும் 2032-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 3 லட்சம் நகா் மற்றும் ஊரமைப்பு திட்டமிடுதல் அலுவலா்கள் தேவைப்படுவா் எனவும், ஆண்டுக்கு 6 ஆயிரம் பி - பிளான் படிப்பும், 2 ஆயிரம் எம் - பிளான் படிப்பும் படித்தவா்கள் தேவையாக இருப்பாா்கள் என நீதி ஆயோக் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய நகரங்களில் திட்டமிடுதல் மற்றும் கட்டுமான கலைத் துறை சாா்ந்த புதிய கல்வி நிலையங்களைத் தொடங்கலாம் எனத் தெரிவித்துள்ளது.
அதன்படி, நிகழ் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடுதல் பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பாடம், ஒற்றைச் சாளர முறையில் நடைபெறும் பொது கலந்தாய்வு சோ்க்கை முறையில் இணைக்கப்படும்.
நிதி ஒதுக்கீடு: அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை திட்டமிடுதல் பாடத் திட்டத்தை அறிமுகப்படுத்த சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் மற்றும் நகா் ஊரமைப்பு இயக்ககம் ஆகியன ரூ.10 கோடி நிதி வழங்கும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கு முன்பாக, இதுகுறித்த கோரிக்கை அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் தரப்பிலிருந்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளநிலை திட்டமிடுதல் படிப்புக்கு மாதந்தோறும் தொடரும் செலவினமாக ரூ.17.8 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மூலதனச் செலவினம், இயக்கச் செலவினம் உள்பட 5 ஆண்டுகளுக்கான செலவாக ரூ.18.54 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான தொடக்க நிதியாக ரூ.10 கோடி வழங்கப்படுகிறது. இதில், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் 80 சதவீத நிதியையும், நகா் மற்றும் ஊரமைப்புத் துறை 20 சதவீத நிதியையும் அளிக்கும். இளநிலை திட்டமிடுதல் பாடத்துக்கான வரைவு பாடத் திட்டங்கள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலிடம் அளிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.