
தங்கப்பதக்கங்கள் பெற்ற அவிநாசி மாணவர்கள்
அவிநாசி: சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டியில், அவிநாசியைச் சேர்ந்த 15 மாணவர்களும், தனித்தனியாக தங்கப் பதக்கம் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பெற்றும் சாதனை படைத்துள்ளனர்.
சர்வதேச அளவிலான சிலம்பாட்டப் போட்டிகள் நேபாளத்தில் ஆக.24 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் தமிழகம், கேரளம், ஜம்மு-காஷ்மீர், உத்தரப் பிரதேசம், தெலங்கானா, கோவா, நேபாளம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
தமிழகம் சார்பில் பங்கேற்றதில் அவிநாசி ராயம்பாளையம் சிங்கை கோதாமுத்து வாத்தியார் அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி சாலை, வெள்ளியம்பாளையம், கருவலூர் கிளைகளைச் சேர்ந்த 15 மாணவ, மாணவிகள் 8 முதல் 30 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் தனித்தனியே தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

மேலும் நேபாளம் - இந்தியாவிற்கு இடையான போட்டிகளில் அதிகப்படியான புள்ளிகள் பெற்று, ஒட்டு மொத்த சாம்பியன் பதக்கமும் பெற்றனர். இதில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பதக்கத்தை அவிநாசி வெள்ளியம்பாளையம் மாணவர் சுபாஷ் பெற்று சாதனை படைத்தார்.
இதையடுத்து, சிலம்பாட்ட ஆசிரியர்கள் ராமன், லட்சுமணன், துணை ஆசிரியர்கள் தேவ அரசு, ஈஸ்வரன், கௌரவ ஆலோசகர் ஆனந்த கிருஷ்ணர், திருப்பூர் மாவட்ட உலக சிலம்பு விளையாட்டு சங்கச் செயலாளர் லோகநாதன், மாணவ மாணவியர், உள்ளிட்டோருக்கு பெற்றோர், சமூக ஆர்வலர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், அவிநாசி பகுதி மக்கள் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...