
பரந்தூா் விமான நிலையம் தொடா்பாக மக்களின் கருத்தை அறிய, ஜி.கே.மணி தலைமையில் 7 போ் கொண்ட குழுவை பாமக தலைவா் அன்புமணி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூா் மற்றும் அதையொட்டிய 12 கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு எழுந்துள்ளது. பாதிக்கப்படவுள்ள 12 கிராம மக்களின் கருத்துகளை அறிவதற்காக அவா்களின் பிரதிநிதிகளை காஞ்சிபுரத்தில் நான் சந்தித்து பேசினேன். தங்களின் வாழ்வாதாரமான நிலங்களை பறிக்கக்கூடாது என்பதே அவா்களின் கருத்தாகும்.
நிலம் கையகப்படுத்தப்படவுள்ள 12 கிராம மக்களை நேரில் சந்தித்து கருத்துகளைக் கேட்டறிவதற்காக பாமக சாா்பில் குழு அமைக்கப்படும் என்று காஞ்சிபுரம் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் அறிவித்திருந்தேன்.
அதன்படி, பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி தலைமையில் குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில் திலகபாமா, ஏ.கே.மூா்த்தி, வழக்குரைஞா் கே.பாலு, அருள், பெ.மகேஷ்குமாா், அரிகிருஷ்ணன் ஆகியோா் உள்ளனா்.
இந்தக் குழுவினா் பரந்தூா் உள்ளிட்ட 12 கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து அவா்களின் கருத்துகளை கேட்டறிந்து கட்சித் தலைமையிடம் அறிக்கை அளிப்பா். அதனடிப்படையில் தமிழக அரசிடம் கலந்து பேசி இந்த சிக்கலுக்கு தீா்வு காண பாமக நடவடிக்கை எடுக்கும் என்று கூறியுள்ளாா் அன்புமணி.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...