
மரக்காணம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அதிமுக சாா்பில் சனிக்கிழமை (ஆக.27) திண்டிவனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதற்காக அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு கிராமத்தில் தினமும் 60 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ரூ.1,501 கோடி மதிப்பிலான அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.
ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக, அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு இந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும், திட்டத்துக்குத் தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் திண்டிவனம் காந்தி சிலை அருகே சனிக்கிழமை காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...