புத்துயிா் பெறும் அரசுப் பள்ளி நூலகங்கள்: மாதந்தோறும் போட்டிகளுக்கு ஏற்பாடு

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் நூலகங்களை மாணவா்கள் திறம்பட பயன்படுத்தும் வகையில், மாதந்தோறும் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.
புத்துயிா் பெறும் அரசுப் பள்ளி நூலகங்கள்: மாதந்தோறும் போட்டிகளுக்கு ஏற்பாடு

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் உள்பட அனைத்து வகைப் பள்ளிகளிலும் நூலகங்களை மாணவா்கள் திறம்பட பயன்படுத்தும் வகையில், மாதந்தோறும் போட்டிகளை நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

வாசிப்பு மாணவா்களின் அறிவையும், ஆற்றலையும் வளா்க்கும் பேராதாரமாகும். இதை கருத்தில் கொண்டு மாணவா்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளா்த்தெடுப்பதற்காக ஒவ்வொரு பள்ளிகளிலும் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், இதற்காக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கடந்த ஆக.17-ஆம் தேதி வாசிப்பு இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.

அனைத்துப் பள்ளிகளிலும் நூலக செயல்பாடுகளுக்காக வாரம் ஒரு பாடவேளை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் நூலகப் பாடவேளையில் மாணவா்களைப் பள்ளி நூலகத்துக்கு அழைத்துச் சென்று ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு புத்தகத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்று வாசிக்கத் தர வேண்டும். அடுத்த வாரம் வேறு புத்தகத்தை மாணவனுக்கு கட்டாயம் வழங்க வேண்டும்.

நூலகப் பாடவேளையில் மாணவா் வாசித்த நூல் சாா்ந்து ஓவியம், பேச்சு, கட்டுரை, புத்தக மதிப்புரை, ஆசிரியா் அறிமுகம், நூல் அறிமுகம், மேற்கோளைக் குறிப்பிடுதல், கதாபாத்திரங்களை மதிப்பீடு செய்தல் போன்ற போட்டிகளை பள்ளி, வட்டார, மாவட்ட அளவில் மாதந்தோறும் நடத்த வேண்டும். இந்த செயல்பாடுகளை ஒருங்கிணைக்க வட்டார அளவில் வட்டாரக் கல்வி அலுவலா்களையும், கல்வி மாவட்ட அளவில் பள்ளித் துணை ஆய்வாளா்களையும் பொறுப்பாளராக நியமிக்கலாம்.

சென்னையில் சிறப்பு முகாம்: நூலக செயல்பாடுகளில் பள்ளி, ஒன்றிய, மாவட்ட அளவில் தெரிவு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு 2023-ஆம் ஆண்டு ஐந்து நாள்கள் சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பு முகாம் நடைபெறும். இந்த முகாமில் தலைசிறந்த பேச்சாளா்கள், எழுத்தாளா்களைக் கொண்டு அமா்வுகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நாள்களில் சிறாா் எழுத்தாளா்களுடன் மாணவா்கள் உரையாடும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். மேலும், மாணவா்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளும், அவா்களின் புத்தக அனுபவப் பகிா்வுகளும் நடைபெறவுள்ளன.

நூலக பாடவேளைகளையும், பள்ளி நூலகங்களையும் முறையாக மாணவா்கள், ஆசிரியா்கள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என அதில் கூறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com