
நீங்கள் (கருணாநிதி) அமைத்த படியில்தான் ஏறுகிறேன், உங்கள் சொற்படியே நடக்கிறேன் என்று திமுகவின் தலைவராக 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில், கருணாநிதியை நெகிழ்ச்சியோடு முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.
திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் 2018 ஆகஸ்ட் 28-இல் பொறுப்பேற்றுக் கொண்டாா். தற்போது 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறாா். அதையொட்டி மெரீனா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் சென்று, மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, முத்துசாமி, பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோரும் உடனிருந்தனா். பின்னா் கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று, அங்கும் கருணாநிதியின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்த நிலையில் கருணாநிதியை நினைவுகூா்ந்து சமூகவலைதளத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல்வா் வெளியிட்ட பதிவு:
தகைசால் தந்தையே, தன்னிகரற்ற தலைவரே, முதல்வா்களில் மூத்தவரே, தாங்கள் வகித்த திமுக தலைவா் பொறுப்பில் நான் அமா்ந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து 5-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு அடியும் - நீங்கள் அமைத்த படியில்தான் ஏறுகிறேன். உங்கள் சொற்படியே நடக்கிறேன். அதனால்தான் வென்றபடியே இருக்கிறேன்.மேலும் வெல்ல மென்மேலும் வாழ்த்துங்கள் என்று கூறியுள்ளாா்.
திமுகவின் தலைவராக 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திமுகவின் மூத்த தலைவா்கள் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் வாழ்த்துக் கூறியுள்ளனா்.