சென்னை: தேசிய கல்விக் கொள்கையை உறுதியாக எதிர்க்கிறோம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் கூறினார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தலைமையேற்று தொடங்கி வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழக முதல்வர் ஆற்றிய உரையில்,
தமிழ்நாட்டில் மொத்தம் 22 பல்கலைக்கழகங்கள் இருக்கிறது. இதில் விடுதலைக்கு முன் உருவாக்கப்பட்டவை இரண்டு பல்கலைக்கழகங்கள்தான். ஒன்று, சென்னைப் பல்கலைக் கழகம் 1857-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இரண்டு, சிதம்பரத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
1947 முதல் 1967 வரையிலான காலக்கட்டத்தில் ஒரே ஒரு பல்கலைக்கழகம்தான் உருவாக்கப்பட்டது. அதுதான், மதுரைப் பல்கலைக்கழகம்! மற்றபடி, 19 பல்கலைக்கழகங்களும், 1967-க்குப் பிறகு, அதாவது, திராவிட அரசுகள் அமைந்த, இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் உருவாக்கப்பட்டவை!
தமிழ்நாடு, உயர்கல்வியில் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதற்கு இதுவே மிகமிக முக்கிய சான்றாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
நாட்டிலேயே சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் 18 தமிழகத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்கள். தமிழகத்தில் கல்வித் துறையில் நாம் மேலும் உயர்ந்துநிற்க வேண்டும்.
இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 நிறுவனங்கள்
தமிழ்நாட்டில் உள்ளது.
தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில், 21 தமிழ்நாட்டில் உள்ளது.
தலைசிறந்த 100 கல்லூரிகளில், 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.
தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில், 10 தமிழ்நாட்டில் உள்ளது.
தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில், 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில்
உள்ளது.
தலைசிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில், 11 தமிழ்நாட்டில் உள்ளது.
100 மருத்துவக் கல்வி நிறுவனங்களில், 8 தமிழ்நாட்டில் உள்ளது.
40 பல் மருத்துவக் கல்வி நிறுவனங்களில், 9 தமிழ்நாட்டில் உள்ளது.
30 சட்டக் கல்லூரிகளில், 2 தமிழ்நாட்டில் உள்ளது.
30 கட்டடக் கலைக் கல்லூரிகளில், 6 தமிழ்நாட்டில் உள்ளது.
கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. உயர்கல்வியில் மேலும் தமிழகம் சிறக்க வேண்டும். வெறும் வேலை வாய்ப்பை மட்டுமே தருவது உயர்கல்வியின் நோக்கமல்ல. தனித் துறை பல்கலைக்கழகங்கள் அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பயின்றோர் பல்வேறு நாடுகளில் பல உயர்ந்த வேலையில் உள்ளனர். பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
பேராசிரியர்கள் நியமனங்கள் முறைப்படி நடந்து வருகின்றன. கல்வித்தரமும் உயர வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையும் உயர வேண்டும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக நாம் இருக்கிறோம். அந்தத்
தேர்வுக்குப் பயந்து அதனை நாம் எதிர்க்கவில்லை.
அது உயர்த்தும் ஏணியாக இல்லாமல் தடைக்கல்லாக இருக்கிறது
என்பதால் எதிர்க்கிறோம். படிப்புதான் தகுதியைத் தீர்மானிக்க வேண்டுமே
தவிர தகுதியிருந்தால் தான் படிக்கவே வர வேண்டும் என்று சொல்வது, இந்த நூற்றாண்டின் மாபெரும் அநீதி!
இதனால்தான் எதிர்க்கிறோம்!
கல்வி உரிமையைப் போராடிப் பெற்ற சமூகம் நாம் என்கிற
காரணத்தால் எதிர்க்கிறோம்!
போராடி சுயமரியாதையை நிலைநிறுத்திய சமூகம், இந்தத்
தமிழ்ச்சமூகம் என்பதால் எதிர்க்கிறோம்!
கல்வியால் முன்னேறுகின்ற சமூகம் நாம் என்பதால் எதிர்க்கிறோம்!
பின்னால் வரக்கூடிய தீமைகளை கடந்தகால வரலாறுகளின்
அடிப்படையில் எடை போட்டு எதிர்க்கிறோம்!
எந்தப் படிப்பாக இருந்தாலும், அதனை நோக்கி மாணவர்களை
ஈர்ப்பதற்காக, நம்முடைய அணுகுமுறைகளும் திட்டமிடுதலும் இருக்க
வேண்டும்.
மாணவர்களை கல்வியிடம் இருந்து அந்நியப்படுத்தும்
அத்தனையையும் நாம் எதிர்க்க வேண்டும்!
அந்த அடிப்படையில்தான் நீட் தேர்வை மட்டுமல்ல புதிய தேசியக்
கல்விக் கொள்கையையும் நாம் எதிர்க்கிறோம்!
மாநிலக் கல்விக் கொள்கை வகுக்க ஓய்வுபெற்ற நீதியரசர்
தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளதே, அறிவியல் சார்ந்த சமூகமாக
தமிழ்ச்சமூகத்தைக் கட்டமைக்க அதற்காகத்தான் அமைத்திருக்கிறோம்!
“To develop the scientific temper” என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் அரசியல்சட்டம் வழங்கியுள்ள அடிப்படைக் கடமை! அந்தக் கடமை எனக்கும் உண்டு!
பல்கலைக்கழகத் துணை வேந்தர்களான உங்களுக்கும் உண்டு!
கல்வியாளர்களான உங்களுக்கும் உண்டு!
புதிய புதிய பாடங்களை அறிமுகம் செய்யுங்கள். புதிய புதிய பட்டப்படிப்புகளைக் கொண்டு வாருங்கள். மாணவர் சமுதாயத்துக்கு எந்தப் பாடத்தில் ஆர்வம் இருக்கிறதோ, அதனுள் அவர்களைப் பொருத்திக் கொள்ள அனுமதியுங்கள்.
புதிய பாதைகள் அமைப்பதாக பல்கலைக்கழகங்கள் அமைய வேண்டும். இந்த ஆட்சிக் காலத்தை, உயர்கல்வியின் பொற்காலமாகத் திகழ வைப்பது துணைவேந்தர்களாகிய உங்களின் கடமை! சமத்துவமும் – பகுத்தறிவுச் சிந்தனையும் மிக்க சமூகத்தைக் கட்டமைப்பதே கல்வியாளர்களான உங்களுக்கு இருக்கக்கூடிய மாபெரும் கடமை, அது உங்களுக்கு வந்துசேரக்கூடிய மாபெரும் பெருமை!
பழமைவாத பிற்போக்குக் கருத்துகளைப் புறந்தள்ளி புதிய அறிவியல் கருத்துகளை ஆக்கப்பூர்வமான, வளமான சிந்தனையை மாணவர்களிடையே வளர்த்து நாட்டுக்கும், எதிர்கால இளைஞர் சமுதாயத்துக்கும், பெருமை
சேருங்கள் என்று கூறினார் முதல்வர்.
சென்னையில் தமிழகத்தைச் சேர்ந்த 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றுள்ளனர்.