திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் மலை மீது காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை மீது 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டத்துடன் 200 கிலோ எடை கொண்ட மகா தீபக் கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மகா தீபம் ஏற்றப்படும்போது பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட மகா தீபம் 11 நாள்களுக்கு எரியும் வகையில் காட்சி அளிக்கும். சிவபெருமான் அக்னி பிழம்பாக காட்சியளித்ததால், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அருணாசலேஸ்வரர் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
பரணி தீபம்: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இதனையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சரியாக 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு அருணாசலேஸ்வரர் கோயில் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழாவையொட்டி திருவண்ணாமலை கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் 13 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொப்பரை மலைப் பயணம்: கோயிலில் இருந்து அம்மணி அம்மன் கோபுரம், வடக்கு ஒத்தவாடை தெரு வழியாக மலையேறும் பாதைக்கு மகா தீபக் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. பா்வதராஜ குல வம்சத்தைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்டோா் 5 மணி நேரத்துக்கும் மேலாக கொப்பரையை சுமந்து சென்று மலை மீது வைத்தனா். கொப்பரையுடன் தீபம் ஏற்றப் பயன்படுத்தப்படும் நெய் சேகரிக்கும் அகண்டமும் எடுத்துச் செல்லப்பட்டது.
இந்த கொப்பறையில் ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3 ஆயிரத்து 500 கிலோ முதல் தர நெய், தீபம் எரிய 11 ஆயிரம் மீட்டா் காடா துணி திரியாகப் பயன்படுத்தப்படுகிறது.
தமிழக கோயில்களில் தீபம்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல முக்கிய கோயில்களில் தீபம் ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் முருகன் கோயில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயில், பழனி மற்றும் வடபழனி முருகன் கோயில்களில் கொப்பறை தீபம் ஏற்றப்பட்டது.