
சென்னையை நெருங்கிவரும் காற்றழுத்தத்தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலசந்திரன் கூறுகையில்,
நேற்று தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை தென்கிழக்கு வங்கக்கட்ல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து 08, 09-ம் தேதிகளில் வடதமிழகம்-புதுவை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவக்கூடும்.
இன்று மாலை உருவாகும் மாண்டஸ் புயல் புதுச்சேரி-ஸ்ரீரிகோட்டா இடையே
கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக நாளை முதல் மூன்று நாள்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிகக் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் டிசம்பர் 9-ம் தேதி மாலை முதல் 10-ம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும்.
எங்கெல்லாம் மிகக் கனமழை/கனமழை பெய்யும்?
டிச.7 - தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிச.8 - கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும்.
படிக்க: மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
டிச.9 - , காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்,
சென்னை, திருவள்ளூவர், ராணிப்பேட்டை, வேலுர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும்.
தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
டிச.10 - சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழையும், 9 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்: சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் இடையிடையே 70 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். பிறகு காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து டிசம்பர் 8 அன்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாள்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.