'மாண்டஸ்' புயல்: எத்தனை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் மாண்டஸ்
கரையை கடக்கும் மாண்டஸ்


சென்னை: தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் நாளை இரவு கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டஸ் புயல் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதையடுத்து, சென்னை உள்பட 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, திருவண்ணாமலை, தருமபுரி, நாமக்கல், திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளனர்.

தீவிரப் புயலாக வலுப்பெறும் மாண்டஸ்

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம், நேற்று இரவு புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்தது. இது தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்கு 460 கி.. கிழக்கு - தென்கிழக்கே மற்றும் சென்னைக்கு 550 கி.மீ. தென்கிழக்கே நிலை கொண்டிருந்தது.

இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வடதமிழகம் - புதுவை - தெற்கு ஆந்திர கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9ஆம் தேதி நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் நாளை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும்.

மேலும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்,  வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதி கனமழை மற்றும் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com