தென்காசிக்கு ஸ்டாலின் பயணித்த 'சலூன் கோச்': மக்கள் பயணிக்க முடியுமா?
By DIN | Published On : 08th December 2022 01:34 PM | Last Updated : 08th December 2022 06:02 PM | அ+அ அ- |

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
முதல்வர் ஸ்டாலின் ரயிலில் தென்காசி செல்கிறார் என்று நேற்று செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தின. அவரது பயணத்துக்காக பொதிகை விரைவு ரயிலில், மிகவும் சிறப்புகள் வாய்ந்த சலூன் கோச் எனப்படும் சிறப்பு ரயில் பெட்டி இணைக்கப்பட்டது.
இதையும் படிக்க.. வேறொருவருக்கு பணத்தை மாற்றி அனுப்பிவீட்டீர்களா? பயம் வேண்டாம்!
அதிநவீன வசதிகள் கொண்ட இந்த சிறப்புப் பெட்டியில்தான் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தென்காசி சென்றடைந்தார். அது தொடர்பான புகைப்படங்கள் இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறதே என்றெல்லாம் எதிர்மறையான விமரிசனங்களும் எழுந்துள்ளன.
அவ்வாறு ஒரு முதல்வர் பயணித்த ரயில் பெட்டி இந்த அளவுக்கு தனிக்கவனமும், விமரிசனங்களையும் பெறுகிறது என்றால், அது பற்றி நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்தானே?!
பொதிகையில் புறப்பட்டு தென்காசி வந்தடைந்து, அம்மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பில் - அன்பின் சாரலில் நனைந்தேன்.
— M.K.Stalin (@mkstalin) December 8, 2022
1,03,508 பயனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
ஆராதனா போன்ற குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசு என்ற பெருமையோடு பணியைத் தொடர்கிறேன். pic.twitter.com/cl59EiqhLZ
சலுன் கோச் எனும் நகரும் வீடு
உயர் பதவியில் இருப்பவர்கள் ரயிலில் பயணிக்கும் போது பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்திய ரயில்வே உருவாக்கியதுதான் இந்த நகரும் வீடு. குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், ஆளுநர், முதல்வர் போன்ற உயர் பதவிகளில் இருப்பவர்கள், விமானம் மூலம் செல்ல முடியாத இடங்களுக்கு ரயிலில் பயணிக்கும் போது இந்த நகரும் வீட்டைத்தான் பயன்படுத்துவார்கள். இது ஒரு சொகுசு விடுதி போல அனைத்து வசதிகளையும் கொண்டதாகவே இருக்கும்.
இதையும் படிக்க.. கரையை கடக்கும் மாண்டஸ்: எத்தனை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
இந்த ரயில் பெட்டியில், குளிர்சாதன வசதிகொண்ட கழிப்பறையுடன் இரண்டு படுக்கையறைகள் உள்ளன. பெரிய வரவேற்பு அறை, சாப்பிடும் அறை, நாற்காலிகள், சமையலறை உள்ளிட்ட அனைத்தும் அடங்கிய ஒரு பெரிய வீட்டிற்கான அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும். இந்த சமையலறையில், குளிர்பதனப் பெட்டியுடன், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் இருக்கும்.
பொதுமக்கள் பயணிக்க முடியுமா?
சில குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே இந்திய ரயில்வே இந்த நகரும் பெட்டிகளை இயக்கி வருகிறது. ஒரு வேளை மக்கள் யாரேனும் இந்த பெட்டியில் பயணிக்க விரும்பினால், அவர்கள் irctctourism.com என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொண்டு பயணிக்கும் வாய்ப்பையும் ரயில்வே வழங்கி வருகிறது என்று அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஆர்சிடிசி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்த சலூன் கோச் பெட்டிகளின் புகைப்படங்களுடன் இந்த தகவலையும் பகிர்ந்துள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி மிக சொகுசான சலூன் பெட்டிகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றில், ஈடுஇணையற்ற வசதிகளுடன் கூடிய பெரிய அறை உங்களுக்கு மகிழ்ச்சியையும் நிம்மதியையும் வழங்கும் என்று பதிவிட்டுள்ளது.
Indulge yourself with IRCTC luxury saloons and you feel pampered. Big room with endless amenities provides you both joy and comfort.#IRCTC#HomeonWheels #irctc #irctcofficial #tourpackages #touristtrain #indianrailways #railway #booking #travel #travelguide #travelholic pic.twitter.com/156QFXMJIL
— IRCTC (@IRCTCofficial) November 25, 2018
முன்பதிவு செய்பவர்களுக்கு, இந்த பெட்டியில் இருக்கும் இரண்டு படுக்கை அறை வசதிகளுடன், கூடுதலாக தேவைப்பட்டால் 4 - 6 படுக்கைகளையும் ஐஆர்சிடிசி ஏற்படுத்திக் கொடுக்குமாம்.
சமையலறையில், சமையல் செய்வதற்கான பாத்திரங்களும் இடம்பெற்றிருக்கும். தேவைப்படுவோர் சமையல் செய்தும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.
எவ்வளவு கட்டணம்?
இந்த சலூன் கோச்சில் பயணிக்க விரும்புவோர், இதற்காக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும். இதுபோல ஐஆர்சிடிசியிடம் 336 சலூன் கோச்கள் உள்ளன.