வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே வெள்ளிக்கிழமை (டிச.9) இரவில் கரையைக் கடக்கக் கூடும் என்றும், வெள்ளி, சனிக்கிழமைகளில் அதி பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ். பாலச்சந்திரன் தெரிவித்தாா்.
இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமாா் 550 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு- தென்கிழக்கில் சுமாா் 460 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இது தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். தற்போதைய நிலவரப்படி, வெள்ளிக்கிழமை (டிச.9) இரவு புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையைக் கடக்கக் கூடும்.
இதன் காரணமாக வெள்ளி, சனிக்கிழமைகளில் (டிச.9, 10) தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதி பலத்த மழை பெய்யக்கூடும்.
வெள்ளிக்கிழமை சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் அதி பலத்த மழையும், தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், அரியலூா், மயிலாடுதுறை, நாகை, திருவாரூா், தஞ்சை, புதுக்கோட்டை, கரூா், திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும்.
சனிக்கிழமை (டிச.10) சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சூறைக்காற்று: வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில், சூறைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 70 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். வெள்ளி மாலை முதல் சனிக்கிழமை காலை வரை வட தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்திலும், சில நேரங்களில் 80 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
கடல் கொந்தளிக்கும்: சனிக்கிழமை வரை தமிழகத்தையொட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவா்கள் சனிக்கிழமை வரை வரை கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புகரில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பலத்தமழை முதல் மிக பலத்தமழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.